DMK Government

“இந்தாங்க அட்ரஸ்... தைரியமிருந்தா என் வீட்டுக்கு ஐ.டி ரெய்டு வாங்க” - உதயநிதி ஸ்டாலின் சவால்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரையின் இல்லத்திலும், அவரது கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பா.ஜ.க அரசால் வருமான வரித்துறை ரெய்டுகள் திட்டமிட்டு ஏவப்படுவதாக அரசியல் பிரமுகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகிய அமைப்புகளை வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது தி.மு.க. மறந்துவிடாதீர்கள்.

நான் கலைஞரின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன். மிசாவையே, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கிஞ்சித்தும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்” எனப் பேசினார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேர்தல் பரப்புரையின்போது பேசிய தி.மு.க இளைஞரணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின், "இன்று காலை என் சகோதரி செந்தாமரை வீட்டில் ஐ.டி ரெய்டு நடைபெற்றுள்ளது. நான் மறுபடியும் இன்னொரு சவால் விடுக்கிறேன். என் வீட்டு முகவரியைத் தருகிறேன். எண். 25/9, செனடாப் ரோடு, சித்தரஞ்சன் சாலை. தைரியமிருந்தால் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாருங்கள்" என சவால் விடுத்துள்ளார்.

Also Read: “நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்!” - மு.க.ஸ்டாலின் மடல்!