DMK Government
"பா.ஜ.க முறைகேடு மீதான விசாரணை முடியும் வரை தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது?" : கட்டம் கட்டிய ஐகோர்ட்!
புதுச்சேரியில் பா.ஜ.க சார்பில் தொகுதிவாரியாக வாட்ஸ்-ஆப் குரூப்கள் ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பா.ஜ.க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறித்து சிறப்பு புலன் விசாரணைக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிடக்கோரி புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாக்காளர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்ய பாஜ.கவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும், அனுமதி பெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பா.ஜ.க-விற்கு மார்ச் 7ல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும், இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 8ல் விண்ணப்பித்ததாக பா.ஜ.க தரப்பில் சொல்வதுபோல எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் விசாரித்து வருவதாகவும், அதன் அறிக்கையை பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் பா.ஜ.க மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பா.ஜ.கவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பா.ஜ.கவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!