DMK Government

“பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது” - ஒரே போடாகப் போட்ட பா.ஜ.க எம்.பி சுப்பிரமணிய சுவாமி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில். அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க போட்டியிடுவது குறித்து பேட்டியளித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி, ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றிபெறாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள சுப்பிரமணியன் “தேசியக் கட்சியான பா.ஜ.க அனைத்து இடங்களிலும், தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அ.தி.மு.க-விம் பிச்சையெடுப்பது போன்று 10 - 20 சீட்டுகளை கேட்டுப் பெற்றுள்ளனர். இதில் 2 - 3 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவார்களா அல்லது ஒன்றில் கூட வெற்றி பெற மாட்டார்களா என்பது தெரியாது.

அகில இந்திய கட்சியான பா.ஜ.க, மாநிலக் கட்சியிடம் பிச்சை வாங்கி போட்டியிடுவது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே தமிழக அரசியல் குறித்து நான் எந்தவித ஆர்வமும் செலுத்தவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘கமல் யார்? அவரும் அரசியலுக்கு வந்துள்ளாரா’ என்று கிண்டல் செய்துள்ளார்.

Also Read: கண்ணன் சஸ்பெண்ட்.. பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை இல்லை - யார் தயவால் தப்பிக்கிறார் ராஜேஷ்தாஸ்?