DMK Government

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அதிமுக அரசு.. விமான நிலையத்தில் எடப்பாடி போஸ்டரை அகற்றாத ஆளுங்கட்சி!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தோ்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் வெளியிட்டது. இதையடுத்து உடனடியாக தோ்தல் விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள், அரசியல் தலைவா்களின் படங்கள் அகற்றப்படுகின்றன. தோ்தல் ஆணையம் உத்தரவின் பேரில் அந்தந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனா். பல இடங்களில் படங்கள் முழுமையாக அகற்றப்படுகின்றன. அவ்வாறு முழுமையாக அகற்ற முடியாத இடங்களில், பேப்பா்கள் ஒட்டியோ அல்லது திரைகள் போட்டோ படங்கள் மறைக்கப்படுகின்றன.

ஆனால், சென்னை விமானநிலையத்தில் மட்டும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குறிப்பாக சென்னை சா்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் பயணிகளுக்கான மருத்துவ பரிசோதனை நடக்கும் பகுதியில் தமிழக சுகாதாரத்துறையினா் வைத்துள்ள பேனரில் தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி படமும், முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா படமும் எந்தவித மறைப்பும் இல்லாமல் இருக்கின்றன.

அதே பகுதியில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையினா் அமைத்துள்ள கவுண்டா்களிலும் முதலமைச்சா் படமும், முன்னாள் முதலமைச்சா் படமும் மறைக்கப்படாமல் இருக்கின்றன. அதோடு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதி மற்றும் புறப்பாடு பகுதியில் உள்ள வி.வி.ஐ.பி லவுஞ்சுகளின் உள்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படங்களும் தோ்தல் விதிமுறைகளின் படி, இதுவரை மறைக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தோ்தல் ஆணையம் தோ்தல் விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தி, சாலைகள், சிறிய தெருக்களில் உள்ள போஸ்டா்களை எல்லாம் அகற்றி வருகின்றனா். ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் உயா் அதிகாரிகள் அவ்வப்போது வந்து செல்லும் ஒரு இடத்தில் இதைப்போல் தோ்தல் விதிமுறைகளை மீறி, படங்கள் இருப்பது ஏன்? என்று விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: ஒரு தலைமுறையையே பாழாக்கிய எடப்பாடி அரசு.. செல்லாகாசாகும் கல்வி.. குழப்பத்தில் மாணவர்களின் எதிர்காலம்!