Election 2026
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
நாடே எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 5 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இன்றுடன் (மார்ச் 24) நிறைவடைந்துள்ளது.
காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 9 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, எந்தவித நிபந்தனையுமின்றி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். மேலும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், மீண்டும் மலர வேண்டும் என்றும், அதுதான் எங்கள் முடிவு என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு இருப்பதை நான் பெருமையாக மட்டுமல்ல, கடமையாகவும் கருதுவதக்கவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உண்மையில் கமல்ஹாசன் செய்தது தியாகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு :-
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.
அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்!
Also Read
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!
-
திருநர்களின் உரிமைகளை பறிக்கும் மசோதா… இந்திய அளவில் கடும் எதிர்ப்பு… பின்வாங்குமா ஒன்றிய பாஜக அரசு!