Election 2024

வெறுப்பு பேச்சு விவகாரம்: சர்வதேச ஊடகங்கள் கண்டனம் -உலக நாடுகள் மத்தியில் தேசத்தின் மானத்தை வாங்கிய மோடி!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து - முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். இந்த சூழலில் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பெரும் அவதூறு பேச்சை பேசியுள்ளார் மோடி.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, நமது நாட்டின் செல்வதை எல்லாம் இஸ்லாமியர்கள் எடுத்து செல்வதாகவும், அவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள், அவர்களுக்கும் நமது சொத்துகள் அவர்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) கொடுக்கப்படுகிறது" என்று இரு சமூக மக்களுக்கு இடையே வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சை பேசியுள்ளார்.

மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதோடு அவர் மீது தேர்தல் ஆணையத்தில் சி.பி.ஐ (எம்), காங்கிரஸ், சி.பி.ஐ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் பலரும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதோடு, மோடிக்கு எதிராக சுமார் 20,000 பேர் தேர்தல் ஆணையத்தில் மோடி மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது இந்தியாவை தாண்டி உலக நாடுகள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மோடியின் பேச்சை உலக ஊடகங்களான CNN, நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்க்டன் போஸ்ட், அல்ஜசீரா, BBC, டைம் என பலவற்றிலும் இந்த செய்தி வெளியாகி கண்டனத்தை எழுப்பியுள்ளது. இப்படி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மானத்தை மோடி வாங்குவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அனைத்து உலக ஊடகங்களும் மோடியின் பேச்சை 'வெறுப்பு பேச்சு, வெறுப்பை விதைக்கும் பேச்சு' என்றே விமர்சித்து செய்திகளை வெளியிட்டுள்ளது. உள்ளூர் முதல் உலகம் வரை மோடியின் இந்த வெறுப்பு பேச்சு பேசுபொருளாக மாறியதோடு, கண்டனங்களையும் முகச்சுழிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதம் சார்ந்து தொடர்ந்து பேசி வந்த மோடியின் பேச்சில், இது எல்லைதாண்டி உள்ளது. இந்த பேச்சு மூலம் இரு சமூக மக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தவே பாஜக முனைப்பு காட்டுகிறது. அதன் எதிரொலியாக தற்போது இந்த பேச்சு அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: மோடியின் தேர்தல் பிரச்சாரம் இன்னும் எவ்வளவு மோசமாகுமோ? : கி.வீரமணி எச்சரிக்கை!