Election 2024

'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் சொல்லிய நபர்: ரூ.36,000 அபேஸ் செய்த பாஜகவினர் : பாஜக பிரசாரத்தில் ஷாக்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து - முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். குறிப்பாக இராமர் கோயில் விவகாரத்தை வைத்தே வட மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களது ஒவ்வொரு பிரசாரங்களிலும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் இல்லாமல் இருக்காது. ஒவ்வொரு முறையும் இந்த கோஷத்தை எழுப்பியே பிரசாரம் மேற்கொண்டு வருகிறது பாஜக. அதன் எதிரொலியாகவே ராமாயணம் தொடரில் நடித்த நடிகர் அருண் கோவிலுக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர் பாஜக ஆளும் உ.பி-யில் போட்டியிடுகிறார்.

உத்தர பிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அருண் கோவிலுக்கு ஆதரவாக பாஜகவினர் தினமும் அங்கே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று சுராஜ்குண்ட் பகுதியில் அருண் கோவில் தனது ஆதரவாளர்களுடன் ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது அங்கே பலரும் கூடியிருந்தனர்.

அந்த சமயத்தில் அங்கிருந்த கடைக்காரர் குபூஷண் என்பவர் உற்சாகமாக 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கத்தை எழுப்பினார். தனது கையை உயர்த்தி உற்சாகத்தில் முழக்கத்தை எழுப்பிய அவர் திடீரென தனது சட்டைப்பையை சோதனை செய்தபோது, அதில் இருந்த பணம், மொபைல் போன் உள்ளிட்டவை காணாமல் போனது தெரியவந்துள்ளது. சுமார் ரூ.36,000 பணத்தை இழந்த அவர், அந்த இடத்திலேயே சட்டென்று மயக்கமடைந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் பாதிக்கப்பட்ட குபூஷண் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர் ரோட் ஷோவில், 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கமிட்ட நபரின் ரூ.36,000 பணம் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இஸ்லாமியர்களை விமர்சித்த மோடி : உண்மை தகவலை வெளியிட்ட தேஜஷ்வி!