Election 2024

போலிசாரை மீறி தேசிய கோடியை பயன்படுத்தி மத பிரசாரம் : தெலங்கானா பாஜக MLA-க்கு குவியும் கண்டனங்கள் !

நாடாளுமன்ற தேர்தல் நாளை தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகள் பிரசாரத்தின்போது, சாதி, மதம் உள்ளிட்ட எதையும் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மதம் சார்ந்த கூட்டத்தை நடத்தியுள்ளது பல்வேறு கண்டனங்களை எழுப்பியுள்ளது.

தெலங்கானா கோஷமஹால் சட்டமன்ற தொகுதியின் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக இருப்பவர் டைகர் ராஜா சிங் என்று அழைக்கப்படும் தாகூர் ராஜா சிங். இவர் நேற்று (17.04.2024) ராம நவமி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அனுமதி கேட்டு ஐதராபாத் போலீசுக்கு மனு அளித்திருந்தார்.

ஆனால் தேர்தல் நடைமுறை, பாதுகாப்பு என பல்வேறு காரணங்களை கூறி, இவரது அனுமதியை போலீசார் மறுத்தனர். இதையடுத்து போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று ராம நவமி ஊர்வலத்துக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று மாலையே நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அங்கிருந்த பாஜக மற்றும் இந்துத்வ அமைப்புகள் கலந்துகொண்ட நிலையில், இதில் DJ இசையோடு, ஹிந்துத்வாவை புகழ்ந்து பாடலும் ஒலிக்கப்பட்டது. இதனை ராஜா சிங்கே பாடியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். கொடியோடு சேர்த்து தேசிய கொடியையும் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ-க்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருவதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Also Read: “தேர்தல் களத்தில் கண்ட காட்சி, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு சாட்சி”: அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!