Election 2024

அரசியல் சாசனமே பாஜகவின் முக்கிய குறி... மீண்டும் அம்பலமான பாஜகவின் உண்மை முகம் !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது, ஜூன் 1-ல் நிறைவடைகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவினரும், மோடியும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, முதற்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டார்.

மேலும் கடந்த நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், மோடி உரையின்போது பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் என தெரிவித்தார். அப்போது தொடங்கி இப்பொது வரை நாடு முழுவதும் பாஜகவும், அதன் கூட்டணியும் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என பாஜகவினர் பேசி வருகின்றனர்.

குறிப்பாக மோடி பேசும் ஒவ்வொரு மேடையிலும் இந்த வார்த்தையை சொல்லமால் இருந்ததில்லை. மோடியின் பேச்சை எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவ்வாறு பாஜக 400 இடங்களையே கைப்பற்றுமெனில், அது முறைகேடு மூலமாக மட்டுமே எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாஜக இந்த முறையும் வெற்றி பெற்றால், நாடு மீண்டும் அடிமைப்பட்டு விடும் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் சுதந்திரம் பறிபோய் விடும் என்றும், அரசியல் சாசனமே இல்லாமல் போய்விடும் என்றும் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில், தற்போது மேலும் ஒரு பாஜக வேட்பாளர் பேசியுள்ளார்.

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் அயோத்தி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி-யாக இருக்கும் லல்லு சிங்கிற்கு, மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில், "நாம் (பாஜக) ஆட்சியை கைப்பற்ற 272 தொகுதிகள் இருந்தால் போதும். ஆனால் அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என்றால் பாஜக 400 இடங்களை கைப்பற்ற வேண்டும்" என்று பேசியுள்ளார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஏற்கனவே ராஜஸ்தானின் நாகவுர் பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தாவும், கர்நாடக மாநில பாஜக எம்.பி அனந்த குமாரும், இதே போல் பேசி சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு பாஜக வேட்பாளர் பேசியுள்ளது கண்டனங்களை குவித்து வருகிறது. இதன் மூலம் பாஜகவின் அடுத்த குறி, அரசியல் சாசனத்தை மாற்றுவது என்பது தெளிவாக தெரிகிறது.

Also Read: பாஜக வேட்பாளர் நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு சம்மன்