Election 2024

BJP vs JDS கூட்டணி பேச்சுவார்த்தை : மேடையிலேயே வெடித்த மோதல்... பாஜக கூட்டணியில் மேலும் ஒரு அதிர்ச்சி !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கிய நிலையில், பாஜகவின் NDA கூட்டணியிலும் சில கட்சிகள் உள்ளது.

அதன்படி கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சி உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் அறிவித்தது. மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெற்றி பெரும் என்றும் பகிரங்கமாக அறிவித்தது. தொடர்ந்து இந்த கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், நேற்று தும்கூர் தொகுதியில் வைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது JDS கட்சியை MLA, MT கிருஷ்ணப்பா கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் தோல்விக்கு பாஜக நிர்வாகி கொண்டாஜி விஸ்வநாத் தான் காரணம் என்று பகிரங்கமாக மேடையில் வைத்து பேசினார். இவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில், பாஜக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சோமன்னா, குறுக்கிட்டு பேச்சை தடுத்தார்.

இதனால் மேடையில் வைத்தே பாஜக - JDS கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, கூட்டணி கட்சிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நிர்வாகியான கொண்டாஜி விஸ்வநாத், JDS கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளதால், தற்போது JDS கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால் இரு கட்சியினரும் மனக்கசப்பில் உள்ளனர். JDS கட்சி தலைவர் HD குமாரசாமி இந்த நிகழ்வு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தல் கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமாக ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கோட்டா : நீட் தேர்வால் தொடரும் சோகம் - 3 மாதங்களில் 6 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!