DMK

‘கலைஞரின் கடைசி யுத்தம்’ நூலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்தபோது மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டு தொடரப்பட்ட வழக்கை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற புத்தகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (6.8.2020) வெளியிட்டார்.

முன்னாள் முதல்வரும் - தி.மு.க தலைவருமாக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்தபோது, தமிழக அரசு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்றிரவே இதுதொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

மெரினாவில் தி.மு.க தலைவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை அவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முத்தமிழறிஞர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த தீர்ப்பை வழங்கியது.

இந்த வழக்கை மையமாகக் கொண்டு சன் நியூஸ் சிறப்புச் செய்தியாளரான D.ரமேஷ் குமார் “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். மேலும் சட்டத் துறையில் தி.மு.கவின் போராட்டங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புத்தகத்திற்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அணிந்துரை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (6.8.2020) சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞரின் கடைசி யுத்தம் புத்தகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனை தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் வில்சன், எம்.பி., மாநிலங்களவை உறுப்பினரும் - மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி., தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், சன்நியூஸ் சிறப்புச் செய்தியாளர் ஈவெரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Also Read: “கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் மாரத்தான் 2020” - துவக்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!