DMK

தந்தை மகன் கொலை: “அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது ’‘கருத்து’அல்ல கலப்படமற்ற விஷம்” - பொன்முடி MLA பதிலடி!

"உலகையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது “கருத்து” அல்ல; கலப்படமற்ற விஷம்!" என தி.மு.க. முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-

“வழக்குப் பதிவு செய்யப்பட்ட, ஜெயராஜும், பென்னிக்சும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்” என்று ஒரு இதயமற்ற அறிக்கையை வெளியிட்டு- எங்கள் கழகத் தலைவர் ஏதோ அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று மரணத்திலும் மனித நேயமின்றி குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும் அமைச்சர் சி.வி.சண்முகம் “முகவரி தெரியாமல் அலைபவர்” போல் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது. உயர் நீதிமன்ற உத்தரவில் விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு - சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகும் கூட - “இது வழக்கமான லாக்அப் மரணங்கள் போல் அல்ல” என்று சட்ட அமைச்சரே கூறுவது “நிதானமாக” “மனசாட்சியுடன்” கூறும் கருத்தா அல்லது முதலமைச்சர் பழனிசாமியின் “கூலியாட்கள்” எழுதிக்கொடுத்த அறிக்கையில் வெறும் கையெழுத்து மட்டும் போட்டாரா சண்முகம்?

“இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருந்தது” என்று 14 நாட்களுக்குப் பிறகு உலகத்தையே உலுக்கிய ஒரு இரட்டைக் கொலை விவகாரத்தில் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது “கருத்து” அல்ல; கலப்படமற்ற விஷம்!

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் கூறியிருப்பது போல் “கொலை வழக்கே பதிவு செய்யாமல் அந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி விட்டோம்” என்று அமைச்சர் கூறுவது யாரை ஏமாற்ற? கொலையிலும் கண்துடைப்பு நாடகம் போடுவது கொடிய குற்றமல்லவா?

சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சியில், தற்போது இருக்கும் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள்வரை முன்பு உள்ள ஒரே பணி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மறைக்க இவ்வளவு கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும்வரை சி.வி.சண்முகம் எங்கே போனார்?

குற்றவியல் நீதிமன்ற நடுவர் அந்த இருவரையும் ரிமாண்ட் செய்தது சட்டப்படி தவறு என்று எங்கும் குரல் ஒலித்த போது சட்ட அமைச்சர் எங்கே தூங்கிக் கொண்டிருந்தார்?

குற்றுயிரும் குலையுயிருமாகக் கொண்டு வரப்பட்ட இருவரையும் கிளைச்சிறையில் அடைத்த சிறை அதிகாரி குறித்து மக்கள் எல்லாம் கொதித்து எழுந்த போது சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எங்கே முடங்கிக் கிடந்தார்?

“அப்பாவி இருவரது இறப்பை வைத்து, அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க.,வும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாகத் தோன்றுகிறது” என்று எங்கள் கழகத் தலைவரை விமர்சனம் செய்துள்ள சி.வி.சண்முகம், “அரசின் மீது பழி போடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது” என்கிறார்.

சாத்தான்குளத்தில் நடந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணங்களுக்கு “கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது” என்று உயர்நீதிமன்றம் சொன்னதை மறைப்பது ஏன்?

காவல் நிலையத்திற்குப் போன அமைச்சரின் துறையைச் சேர்ந்த நீதிமன்ற நடுவரையே மிரட்டிய போலீஸ் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானதை மறைப்பது ஏன்?

உயர்நீதிமன்றத்தின் முன்பு சட்டத்துறை நியமனம் செய்த அரசு வழக்கறிஞர்கள் “காவல் நிலையத்தில் நீதிபதியிடம் நடந்து கொண்டதற்காக” நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது சண்முகத்தின் “நினைவுக்கு” இன்னுமா வரவில்லை? ஆகவே, இரட்டைக் கொலையை மறைக்கச் சூழ்ச்சி செய்யும் கேடுகெட்ட யுக்திதான் அமைச்சர் சண்முகத்தின் அறிக்கை!

“Justice for Jayaraj and Fenix” என்னும் பதாகைகளைத் தூக்கிப் பிடிப்பதும்” “வழக்கின் போக்கைக் குலைப்பதற்கும் அரசியலாக்குவதற்கும் தி.மு.க. சதிசெய்து வருகிறது” என்று “நாடோடித்தனமாக” குறை சொல்லும் சி.வி.சண்முகம், அந்த இருவரின் கொடூரமான மரணத்தை ஈவு இரக்கமின்றி கொச்சைப்படுத்தியுள்ளார்.

அவர்களைக் காவல் நிலையத்தில் அடித்துக் கொன்றுவிட்டு அதை லாக்அப் மரணம் இல்லை என்று மறைத்து உடல் நலக்குறைவு என்று சப்பைக் கட்டு கட்டி - உயர்நீதிமன்றம் தலையிடும்வரை கைது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து - நீதிபதியை மிரட்டியவர்களை “காத்திருப்போர் பட்டியலில்” கொண்டு வந்து விட்டு- பிறகு சில மணி நேரங்களிலேயே அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி மிகப்பெரிய சதித் திட்டத்தில்- சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சரும், சட்டத்துறை மற்றும் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சி.வி.சண்முகமும்தான்!

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-க்குத் தேவையான அனைத்தையும் செய்திருப்பது இந்த அரசும், ஆதரித்து அறிக்கை விடும் அமைச்சர்களும்தான். ஏழை அழுத கண்ணீர் உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் முதற்கட்ட நீதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதை இதுபோன்ற அறிக்கைகள் மூலம் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றவர்கள் தடுக்காமல் இருந்தாலே- நீதி நிலைநாட்டப்படும்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் பாராமல் சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, ஆடிட்டர் ராஜசேகரனை கொடூரமாகத் தாக்கியது, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த மறைந்த டி.என்.சேசன் அவர்களைத் தாக்கியது, மாநிலத்தின் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டி அவர்களை இதே திண்டிவனத்தில் வழி மறித்துத் தாக்குதல் நடத்தியது, சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தூத்துக்குடி ரமேஷை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கியது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. பாலனை “வாக்கிங்” போன போது “கூலிப்படை” வைத்து கொலை செய்தது- டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு உயர்நீதிமன்றம் என்றும் பாராமல் அ.தி.மு.க. மகளிரணி ஆபாச ஆட்டம் போட்டுத் தாக்கியது, நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் அவர்களின் வீட்டிற்கு மின்சாரத்தைக் கட் பண்ணியது, உயிரோடு தர்மபுரி மாணவிகளை எரித்துக் கொன்றது, கொடநாட்டில் கொலை- கொடநாட்டில் கொள்ளை- அந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவும் சாட்சிகள் அடுத்தடுத்து கொலை- பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு என்று “ரவுடித்தனமும்” “கொலைகளும் அரங்கேறுவதும்- தர்மபுரி மாணவிகளை எரித்துக் கொன்றவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!

ஏன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கொலைப்பழி சுமத்தி விட்டு- தனது தம்பி மைத்துனரான முருகானந்தம் கொலை செய்யப்பட்டதை மறந்துவிட்டு தைலாபுரம் விருந்துக்குப் போனது யார்? இதே சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், அவரது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்தானே!

Also Read: “உரிமையாளரை மாற்றும் வாடகைதாரருக்கெல்லாம் திமுக தலைவரை பற்றி பேச அருகதை இல்லை” - ஐ.பெரியசாமி கண்டனம்!

“காருக்கு அடியில் ஒளிந்து நான் உயிர் தப்பினேன்” என்று உயர் நீதிமன்றத்தில் கதறி முறையிட்டு- அந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சி.வி.சண்முகம் – அக்கட்சியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்த போது அமைச்சர் பதவிக்காக கை கட்டி நின்று- கும்பிடு போட்டவர்தானே; இன்றும் கும்பிடு போட்டு அரசு கஜானாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பவர்தானே!

ஆகவே, “நெறி சார்ந்த அரசியலுக்கு” துளியும் இலக்கணம் இல்லாத அமைச்சர் சி.வி. சண்முகம் எங்கள் கழகத் தலைவரின் நெறி சார்ந்த அரசியலைக் கேள்வி கேட்கத் தகுதியும் இல்லை; தார்மீக உரிமையும் இல்லை என்றும், உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையில் தொடர்புடையவர்கள், உதவியவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என பொன்முடி எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ளார்.

Also Read: சாத்தான்குளம் கொலை: கணக்குக்காட்ட கண்துடைப்புக் கைதாக மாறிவிடக் கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!