DMK

“நெசவாளர்களை வஞ்சிக்கும் போக்கை கைவிடாவிட்டால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்” - ஐ.பெரியசாமி எச்சரிக்கை!

“நெசவாளர்களை வஞ்சிக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.கழகம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கும்" என தமிழக அரசுக்கு தி.மு.க துணை பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரிய தொழிலாக திகழும் கைத்தறியின் அடையாளமான சின்னாளபட்டியில் சுமார் 4200 க்கும் மேற்ப்பட்ட நெசவாளர்கள் தற்போது வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

8 நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட உறுப்பினர்கள் சுமார் 1,800 பேரும், உறுப்பினரல்லாத 2,400 பேரும் கொரோனா பேரிடர் ஊரடங்கில் அரசின் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

கொரோனாவிற்கு முன்னர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெசவாளர்களுக்கு வழங்கிய பட்டுநூல் மூலப்பொருளான நூல்-பாவுகளுக்கு உரிய சேலை நெய்த கூலிப் பணத்தை இன்னமும் பட்டுவாடா செய்யாதது மற்றும் தற்போது தொழில் உற்பத்தி புரிவோர்க்கான தளர்வு ஆகி சுமார் 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை புதிதாக நெசவாளர்களுக்கு சேலை நெய்ய நூல்-பாவுகளை வழங்க கூட்டுறவு சங்கங்கள் முன்வரவில்லை. ஆகமொத்தம் 65 நாட்களில் நெசவாளர்கள் எந்த வித வருமானமும் இல்லாமல் வாடி வருகின்றனர். மேலும் தறி ஒன்றுக்கு தலா ரூபாய் 10,000 மற்றும் நெசவாளர் பிரதிநிதிகளுக்கு ரூ. 5,000 நிவாரணம் வேண்டி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசுத் தரப்பில் நிவாரணம் ரூ. 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு பத்திரிகைகளில் மட்டுமே வந்ததே தவிர இதுவரை எந்த ஒரு நெசவாளருக்கும் நிவாரணம் வரவில்லை.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தனியார் மாஸ்டர் வீவர்களின் ஏஜண்ட்கள் நூல்-பாவுகளை நெசவாளர்களுக்கு வழங்கி "வறுமையைப் பயன்படுத்தி குறைந்த கூலிக்கு வேலை வாங்கும் அடிமைப்போக்கினை அமல்படுத்தி வருகிறது. இதனை அரசும், கூட்டுறவு சங்கங்களும், கண்டுகொள்ளாது இருப்பது ஈவு இரக்கமற்ற செயல்.

நடைமுறையில் உள்ள கூலியில் சுமார் 15 % முதல் 20% வரை கூலியானது குறைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

"வேலை கொடு இல்லையேல் சோறு கொடு" என்ற வறுமை ஓலங்கள் அரசின் செவிக்கு இன்னும் கேட்கவில்லையோ..?!

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அஞ்சுகம் காலனியில் நெசவாளர்கள் "கஞ்சித் தொட்டி" திறக்கப்பட்ட அவலநிலையும் , அதன்பின்னர் தொடர்ந்து அண்ணா நகர் பகுதி நெசவாளர்கள் "கஞ்சித் தொட்டி" திறக்கப்பட உள்ளதையறிந்து வட்டாட்சியர், கைத்தறி துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சென்று தடுத்து நிறுத்திய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது கூட அரசின் கண்களுக்கு தெரியவில்லையோ..?!

ஆகவே தமிழக அரசு, வாழ்வாதாரம் நொடிந்த நிலையில் வாடிவரும் நெசவாளர்களுக்கான வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கி, உரிய கூலி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், காலம் தாழ்த்தும் பட்சத்தில் அரசை கண்டித்து தி.மு.கழகம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கும்.

அதுமட்டுமின்றி, நேரிடையாக நெசவாளர் பிரதிநிதிகளுக்கு முறையாக நூல்-பாவுகளை வழங்காமல் , தனியார் ஏஜண்ட்களின் பிரதிநிதிகளுக்கு மறைமுக ஒப்பந்தமாக வேலையினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.க. அரசை மகிழ்விப்பதில் செலவிடும் நேரத்தை மக்களைக் காக்க செலவிடுங்கள்": மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்