DMK

நேரடியாக தானே களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு ‘மாஸ்க்’ வழங்கிய தி.மு.க எம்.பி! #CoronaAlert

சேலம் மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களோடு நேரடியாகக் களத்தில் இறங்கி, பொதுமக்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தி.மு.க-வின் மக்கள் பிரதிநிதிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உபகரணங்கள் வாங்க நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து முதல்கட்டமாக 50 லட்ச ரூபாய் வழங்குவதற்கான பரிந்துரை கடிதத்தை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்து வழங்கினார்.

மேலும், சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி வழங்கிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கி, பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ‘மாஸ்க்’ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, ஊரடங்கைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரும் வணங்கத்தக்கவர்கள் என்றும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Also Read: கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் - ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆபத்து காலங்களில் அசத்தும் தி.மு.க தலைவர்!