DMK
“குடிசை வீட்டில் வாழ்க்கை... திருமணம் செய்துகொள்ளாமல் மக்கள் பணி” - மறைந்த காத்தவராயனின் எளிய வாழ்வு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவான காத்தவராயன் (59) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். இந்தச் செய்தி தி.மு.கவினர் மற்றும் அவரது ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக 1980ம் ஆண்டு சேர்ந்த காத்தவராயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 2011ல் நகர்மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்ட இவரை அத்தொகுதி மக்கள் எம்.எல்.ஏவாக்கி அழகு பார்த்தனர். தொகுதி மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் மிகத் திறமையாக வாதிட்டவர் காத்தவராயன்.
எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த காத்தவராயன் திருமணமே செய்துகொள்ளாமல் இறுதிவரை மக்கள் பணியும், கட்சிப் பணியுமே ஆற்றி வந்துள்ளார். பேரணாம்பட்டு கிராமத்தில் தனது சகோதரரின் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
10*10 அளவிலான ஓலைக் குடிசை வீட்டிலேயே, தன்னுடைய இறுதி காலம் வரை வாழ்ந்து வந்திருக்கிறார் காத்தவராயன். அவரது எளிமையும், பண்பும் மற்றவருக்கு ஒரு பாடமாகவே அமைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை எளிமையாக வாழ்ந்தார் என்பது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயனும் இணைந்துள்ளார் என்பது அத்தொகுதி மக்களுக்கும் பெருமைக்குரியதே.
அதுமட்டுமல்லாமல், 1954ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின் போது குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காமராஜர் முதலமைச்சரானார். கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதே குடியாத்தம் தொகுதியில் தி.மு.கவின் காத்தவராயன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!