DMK

“சட்டமன்றத் தேர்தலிலும் மக்களின் ஆதரவு தொடரும்; தி.மு.க ஆட்சியமைக்கும்” - உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம், கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் பேரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான இலக்கை அடைந்திருக்கிறோம். தற்போது 30 லட்சமாக இருந்த இலக்கை 50 லட்சமாக நிர்ணயித்துள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதற்காக இன்னும் வேகமாகவும், விவேகமாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிரிக்கெட் போட்டி நடத்தவிருக்கிறோம்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை தி.மு.கவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அ.தி.மு.கவுக்கு மக்களே பதிலளித்திருக்கிறார்கள். யார் உண்மையாக பயந்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்தே தெளிவாகிவாகியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலும், வாக்கு எண்ணிக்கையும் எந்த முறைகேடுகளும் இல்லாமல் நடைபெற்றிருந்தால் இப்போது இருக்கும் வாக்குகளை விட இன்னும் அதிகமாகவே தி.மு..க கூட்டணிக்கு கிடைத்திருக்கும்.

மக்களின் இதே மனநிலை சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் தி.மு.கவுக்கு ஆதரவாக தொடரும். நிச்சயம் தி.மு.க ஆட்சியமைக்கும். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டம் தொடரும்.

அ.தி.மு.க அரசின் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை தோலுறிக்கும் தி.மு.கவின் பொய்ப்பெட்டி நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் தொடரும்” என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.