DMK
“அண்ணா உருவாக்கிய அமைப்பையே சிதைக்கிறது அண்ணா பெயரிலான கட்சி” - தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழியைப் பயிற்றுவிப்பது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டேன். அதற்கு விளக்கமாக இந்தி வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்றைக்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது இந்த பயிற்சி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2014ம் ஆண்டில் இருந்து அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை திணித்து இந்தி வளர்ச்சித்துறை அமைச்சராகி வருகிறார் மாஃபா பாண்டியராஜன்.
தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக, தான் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஒருவரை இன்று வசதியாக அவரே காட்டிக்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களுடைய ஆட்சி காலத்தில் இருந்தே இந்தி மொழிப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாண்டியராஜன் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்.
அப்படியே 2014ம் ஆண்டிலிருந்து அது நடைமுறையில் இருக்கிறது என்று சொன்னால் 2019-20ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய அறிவிப்பாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய ஒன்றை ஏன் புதிய அறிவிப்பாக வெளியிட்டு அதற்குப் பணம் ஒதுக்குவதாக அமைச்சர் பாண்டியராஜன் சொல்லியுள்ளார் என்பது என்னுடைய முதல் கேள்வி.
இரண்டாவது கேள்வி அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில் பிற மொழிகளில் அந்தப் பயிற்சியை அளிப்பதாக கூறுகிறார்கள். பிற மொழிகள் என்று அரசாணையில் அறிவிப்பை வெளியிடும்போது இந்தி இருக்கிறது என்று ஏன் வெளிப்படையாக கூறவில்லை. இந்த இரண்டு கேள்விகளுக்கும் அமைச்சர் பாண்டியராஜன் பதில் சொல்லவேண்டும்.
இந்தி இருப்பதை ஒளித்து வைத்துக்கொண்டு, பிற மொழிகள் என்ற போர்வையில் இந்தியை கொல்லைப்புறமாக கொண்டு வரக்கூடிய முயற்சியை அ.தி.மு.க அரசு எடுத்து வந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1968ல் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய அமைப்பு.
எந்த இந்தி மொழி தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் வந்துவிடக்கூடாது என்று அண்ணா போராடினாரோ, அந்தப் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய அந்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில், அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்துபவர்கள் இந்தி மொழியை கொண்டுவந்து திணிப்பது வெட்கக்கேடான செயல்'' எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!