DMK

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஒரு அரசியல் வியாபாரி : தங்கம் தென்னரசு காட்டம் !

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினறுமான தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''நேற்றைய தினம் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அளித்த பேட்டியின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுபவித்த மிசா சிறைவாசத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

மிசாவின் வரலாற்று உன்மையை திரிக்கக்கூடிய வகையில் அமைச்சர் பாண்டியராஜனின் இந்தப்பேட்டி நாகரிகத்தின் எல்லையை தாண்டி அநாகரிகத்தின் உச்சமாகவே அமைந்துள்ளது.

அரசியலை வியாபாரமாக நினைத்து செயல்பட்டு வருபவர் அமைச்சர் பாண்டியராஜன். அரசியல்வாதியாக இல்லாமல் அரசியல் வியாபாரியாக உள்ளார். பல்வேறு கட்சிகளுக்குச் சென்று அமைச்சரைவையில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது அதிமுகவில் உள்ளார் என்பதை மறந்து விட வேண்டாம்.

கீழடி நாகரிகத்தை தமிழ் நாகரிகம் எனச் சொல்லாமல் பாரத நாகரிகம் என்று வாய் கூசாமல் சொல்லும் தமிழ் இனத்தின் துரோகியாக உள்ள பாண்டியராஜன் திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி பேசியது கண்டனத்திற்குரியது.

பாண்டியராஜன் அமைச்சர் என்கிற தகுதியை இழந்துவிட்டார். அமைச்சரவை பொறுப்பிலிருந்து அவராக வெளியேற வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலினிடம் பொதுமக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்க தவறிவிட்டால் திமுக இந்த விஷயத்தை ஜனநாயக முறையில் எதிர்கொள்வோம்'' எனத் தெரிவித்தார்.