DMK

“தமிழகத்தில் நடப்பது தாமரை அரசு” : பெரியார் விழாவுக்கு சிக்கல் கொடுத்த அ.தி.மு.க அரசை விளாசிய ஆ.ராசா!

தந்தை பெரியாரின் 141ம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க எம்.பி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா பேசியதாவது, “பெரியார் பிறந்தநாள் கூட்டத்திற்கு காவல்துறை மூலம் சிக்கல்களைக் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இரட்டை இலை அரசாங்கம் அல்ல. மிக மோசமான பா.ஜ.கவின் அடிமை அரசு. தாமரை அரசு. அதனால் தான், பெரியாரை அவர்கள் அப்படிப் பார்க்கிறார்கள்.

நரேந்திர மோடி ட்ரெண்ட் இந்தியாவிலேயே இல்லை. பெரியார் பிறந்தநாள் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் வாழ்க பெரியார் என்றால், ஒரு பிரிவினர் ஜெய் ராம் என்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எங்களைக் கேட்டார்கள் பெரியார் வாழ்க என்கிறீர்களே? யார் பெரியார் என்று... நான் ராமர் யார் என்று கேட்டேன்.

எங்களுக்கு வாழ்வும் சுயமரியாதையும் கொடுத்தவர் பெரியார். இந்தியாவில் தமிழகம் தனித்துத் தெரிவதற்குக் காரணம் பெரியார். அவரை நாம் வாழ்க என்கிறோம். 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கு பிறந்தார் என்று ராமரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்ததாக அவர்கள் சொல்வதற்கு ஆதாரம் இல்லை. 400 ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. எனில், அந்த இடம் யாருக்குச் சொந்தம்? இதைச் சொல்வதற்கு எதற்கு உச்சநீதிமன்றம்? 12 ஆண்டுகள் மற்றொருவருடைய இடத்தை நாம் வைத்திருந்தாலே அது நம்முடையதாகிவிடும் என்கிறது சட்டம்.

அரசியல் சாசன சட்டத்தை மாற்றுவதற்கு பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. பெரியார், அம்பேத்கர் என்கிற தளவாடங்களைப் பயன்படுத்தி இந்துத்துவாவை வீழ்த்துவோம்” என்றார் ஆ.ராசா.