DMK

Anna 112 : ‘தன்னை வெல்வான் தரணி ஆள்வான்’ - கலைஞர் குறித்து அன்றே கணித்த பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை !

முரசொலியில் ஆதிக்கவாதிகளுக்கு எதிராக கலைஞர் எழுதிய கட்டுரைக்காக அவரை சிறையில் அடைத்தார்கள். பாளையங்கோட்டைச் சிறையில் அவரை சந்தித்த அறிஞர் அண்ணா, கலைஞரின் நெஞ்சுரம் கொண்ட மனநிலை குறித்தும், தமிழர்கள், தமிழ்நாடு, தி.மு.க. ஆகியவற்றின் மீதிருந்த அவருக்கிருந்த பற்றையும், உணர்ந்தவர் அதனை ஒரு கட்டுரையாக வடித்தார்.

அந்தக் கட்டுரையில் அறிஞர் அண்ணா பின்வருமாறு தன் மனம் திறந்து பேசுகிறார்.

முரசொலியில் வெளிவந்த கட்டுரை, படம், இவைகளைக் கண்டு மக்கள் கொண்டிடும் எண்ணத்தைப் போக்கிடவும் மாற்றிடவும், வக்கு வழியற்றுப் போன நிலைக்குக் காங்கிரஸ் பிரச்சார யந்திரம் வந்துவிட்டதைத்தானே காட்டுகிறது கருணாநிதி, மாறன் ஆகியோர் மீது பாதுகாப்புச் சட்டத்தை வீசியிருக்கும் செயல்.

எண்ணிப் பார்த்தாரா, எழுபதாம் ஆண்டுக்கு நடைபோடும் பருவத்தினரான பக்தவசலனார்; கருணாநிதியைச் சிறை வைத்திருப்பது பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது பற்றி!

என்ன குற்றம் செய்தான் அந்தப் பிள்ளை? குற்றமா! இவர்களின் குணத்தை அம்பலப்படுத்தினான். எழுதினான்.

எழுதினால் என்ன? ஆட்சியாளர் குடியா முழுகிவிடும்.

ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பயம், கோபம். . .

கருணாநிதி எழுதினால் என்ன? அதை மறுத்து இவர்கள் எழுதுவதுதானே! மக்கள் இருசாராரின் எழுத்தையும் பார்த்து எது நியாயமோ அதனைக் கொள்ளட்டுமே.

எழுதியும் பார்த்தார்கள், காங்கிரசிலே உள்ள எழுத்தாளர்கள். . மக்கள் சீந்தவில்லை போலிருக்கிறது!!

இப்படியும் இதுபோல வேறுபலவும் பேசிக்கொள்வார்களே! இது ஆட்சியில் உள்ளவர்களின் புகழினையா வளர்த்துவிடும்!! ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதன் விளைவோ இந்த அடக்குமுறை!!

இவைபற்றி எண்ணிடும்போது, சிறையில் தம்பி அடைக்கப்பட்டிருப்பது குறித்து இயற்கையாக எழும் சோகம்கூட மறைகிறது; கருணாநிதியின் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஆட்சியாளர் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது; ஒரு வெற்றிப் புன்னகை தன்னாலே மலருகிறது.

கழகத்தின் வளர்ச்சி கண்டு காங்கிரஸ் அரசு கதிகலங்கிப் போயுள்ளதை எடுத்துக்காட்டி, கழகத் தோழர்களுக்கு மேலும் எழுச்சியைத் தரவல்ல நிகழ்ச்சி, கருணாநிதியைச் சிறைப்படுத்தி இருப்பது என்பது புரியும்போது மகிழ்ச்சிகொள்ளக்கூட முடிகிறது,

கழக வளர்ச்சியை அரசினர் கண்டு கலங்கிடும் வண்ணம் பேச்சாலும் எழுத்தாலும் பணியாற்றியதற்காக கழகம் என்ன விதத்தில் நன்றியைத் தனது கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வது?

ஒன்று இருக்கிறது. கற்கோட்டையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதிக்குக் கழகத் தோழர்கள் காட்டக்கூடிய நன்றியறிவிப்பு! தருமபுரித் தேர்தலில் கழகம் வெற்றி பெறவேண்டும் அந்தச் செய்தி செந்தேனாகி எத்தனை கொடுமை நிறைந்த தனிமைச் சிறையினையும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக்கிடும்.

அந்த வெற்றிச் செய்தி, காடு மலை வனம் வனாந்திரங்களைக் கடந்து, காவல்கட்டு யாவற்றினையும் மீறி கருணாநிதியின் செவி சென்று மகிழ்ச்சி அளித்திடும். அப்போது முதியவர் முதலமைச்சர் பக்தவத்சலனார் யோசிப்பார், இதுவும் பயன்தரவில்லையே என்பதாக.

இந்த நோக்கத்துடன் கழகத் தோழர்களும் ஆதரவாளர் களும், தருமபுரி இடைத்தேர்தலில் கழகம் வெற்றி பெற உடனடியாக முனைந்திட வேண்டும்.

கவலையுடன் தம்பி என்னைத் தருமபுரி பற்றிக் கேட்டபோது, நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்திருக்கிறேன், தருமபுரியில் கழகம் நிச்சயம் வெற்றிபெறும் என்று.

அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதைவிட, அடக்கு முறையால் தாக்கப்பட்டு நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைச் சிறையில், பாஞ்சாலங்குறிச்சிச் சீமையில், அடைக்கப் பட்டிருக்கும் கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் வெறெதுவும் இருக்க முடியாது.

அடக்குமுறையை வீசி அறப்போர் வீரர்களை அடக்கி விடவோ, அவர்தம் பாசறையை ஒழித்துவிடவோ முடியாது. இது மிக எளிதாக எவருக்கும் புரிந்திடும் உண்மை என்றாலும், அரசாள்வோர், அதிலும் தமது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து பீதிகொண்டுள்ள நிலையிலுள்ள அரசாள்வோர், உண்மையினை மறந்துவிடுகின்றனர்.

சிறைக்கோட்டம் தள்ளப்படும் இலட்சியவாதிகளோ, உறுதி பன்மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல, தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம்பற்றிய எண்ணம், இவைகளைக்கூட மறந்துவிடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப்பற்றிய எண்ணம் எழுப்பி விடும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது, இதுபற்றியே ஆன்றோர், சிறைச்சாலையை அறச்சாலை என்றனர்.

பாளையங்கோட்டைச் சிறைவாயிலில், கண்டேன், இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை. அங்குப் பொறிக்கப்பட்டிருப்பது என்ன? "தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!''

இவ்வாறு தம்பிக்கு அண்ணனாக அறிஞர் அண்ணா எழுதிய இந்த கடிதம் கலைஞரைப் பற்றி அவர் கணித்ததை காட்டியது.

அண்ணா கணித்தது வீண்போகவில்லை. கலைஞர் தரணி ஆண்டார். தமிழர் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். அண்ணாவின் கனவை நனவாக்கினார்.