DMK

“இலக்கை மிஞ்சும் வகையில் உறுப்பினர்களைச் சேர்ப்போம்” : இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை!

தி.மு.க இளைஞரணி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் நீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளங்கள் தூர்வாருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் அருகே நாரணமங்கலத்தில் உள்ள திருவாசல்குளம் தூர்வாரும் பணி இன்று காலை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மேற்பார்வையில் இப்பணியை இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் மேற்கொள்கின்றனர்.

ஜே.சி.பி இயந்திரத்தை இயக்கி இந்த தூர்வாரும் பணியைத் துவக்கி வைத்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழகம் முழுவதும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் ஏரி குளங்களை தூர்வாரும் பணியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்வது என தி.மு.க இளைஞரணி முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மதுரையில் உள்ள ஒரு கண்மாய் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம்.

அதேபோல் இன்றைக்கு திருவாரூரில் உள்ள இந்தக் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்திருக்கிறோம். இதனைத் தொடர்ந்து திருக்குவளையில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளோம். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் குளம் தூர்வாருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை தி.மு.க இளைஞர் அணியினர் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.

தி.மு.க இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணியை வருகிற செப்டம்பர் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளோம். தமிழகம் முழுவதும் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் எங்களது பணி தொடங்கப்படுகிறது. இந்த இலக்கை மிஞ்சும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.