DMK

”காலம் எங்களை மன்னிக்கட்டும் அம்மா !” - அனிதா நினைவுநாளில் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான கடிதம்

நீட் அநீதியால் மாண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு இரண்டாம் ஆண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

அனிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று உருக்கமான கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“2017ம் ஆண்டு செப்டம்பர் இதே நாளில் நம் தங்கை அனிதா நம்மை விட்டு மறைந்தாள். அவள் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அனிதாவின் கடைசி நேர மனநிலையை நினைக்கையில் மனம் பதறுகிறது.

அனிதா நம்மை விட்டு மறைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், “இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காத போது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது மட்டும் எப்படிச் சரியாகும்”, என்று கேட்ட அவளின் கடைசி கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்தக் கேள்விக்கான பதிலை நோக்கித் தான் இனி நம் பயணம் இருக்க வேண்டும்.

அனிதாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் பேசிய நம் தலைவரும் இதே கருத்தைத் தான் வலியுறுத்தினார். காங்கிரஸ் அரசு அமைந்ததும் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ராகுல் காந்தியை சொல்ல வைத்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் அனிதாவைப் பற்றி நானும் பலமுறை பேசியிருக்கிறேன். ஒரு அண்ணனாக எனக்கு கடமை இருப்பதாக நினைக்கிறேன். இங்கு நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால் உன் போன்ற தங்கைகளுக்கு எங்களால் இயன்ற உதவியை நிச்சயம் செய்வோம் என்ற உறுதியை உன் நினைவு நாளில் ஏற்கிறோம் அனிதா.

உன் மறைவுக்கு கொதித்தெழுந்த லட்சோசபலட்ச சகோதரர்களின் சார்பில் அஞ்சலியைத் தெரிவிக்கிறோம். காலம் எங்களை மன்னிக்கட்டும் அம்மா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.