DMK
“நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்க வைத்திடும் அச்சொல்...” - அன்று ஸ்டாலின் வடித்த இரங்கற்பா!
முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்து இன்றோடு ஓராண்டாகிறது. கோடிக்கணக்கான தொண்டர்களைக் கலங்க வைத்தது அந்தத் தகத்தாய சூரியனின் மறைவு. அப்போது, தலைவர் மு.க.ஸ்டாலின், தன் தந்தையான தலைவனுக்கு எழுதிய இரங்கற்பா கேட்டோரையும், கண்டோரையும் கண்ணீர் உகுக்க வைத்தது.
தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய அந்தக் கடிதம் கீழே...
''எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?
என் உணர்வில், உடலில், ரத்தத்தில், சிந்தனையில், இதயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?
“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று நினைவிடத்தில் எழுதவேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?
95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ‘நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?
திருவாரூர் மண்ணில் உங்கள் 95-வது பிறந்தநாளாம் ஜூன் 3-ம் நாள் நான் பேசும்போது, ‘உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள்’ என்றேன். அந்த சக்தியையும், பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்; தருவீர்களா தலைவரே!
அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் வென்று காட்டுவோம்!
கோடானு கோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்... ஒரே ஒருமுறை... “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!
“அப்பா அப்பா” என்பதைவிட, “தலைவரே தலைவரே” என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒருமுறை இப்போது ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?”
கண்ணீருடன்,
மு.க.ஸ்டாலின்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!