DMK

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தி.மு.க தொடர்ந்து பாடுபடும்: மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை பெரம்பூர் பள்ளியில், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். பின்னர் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார். மேலும் நலிவடைந்த மாணவ - மாணவியருக்குக் கல்வி உதவித்தொகையும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் நிழச்சியில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ”இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கும் மாணவ பருவம் என்பது நினைத்த நேரத்தில் கிடைப்பதில்லை. அந்த பருவத்தில் தான் நம் கல்வி அறிவு, ஆற்றல் என அனைத்தையும் கற்றுக் கொள்ளக்கூடிய சூழலைப் பெறுகிறோம். கல்விக்கு முன்னுரிமை தரும் அரசு தான் நிலைத்து நின்றிருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் தந்த ஒரு மாபெரும் தலைவராக விளங்கியவர் கர்மவீரர் காமராஜர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் தி.மு.க ஆட்சிக் காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். எனது சட்டமன்ற கூட்டத்தின் முதல் உரையே, கல்வி பயிலும் மாணவர்களின் நலன் சார்ந்தது தான். அது என்னவென்றால் மாணவர்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு வர மிகுந்த சிரமம் அடைகிறார்கள். எனவே அவர்கள் பள்ளிக்கு விரைவாக பாதுகாப்பாகச் செல்வதற்கு இலவச பேருந்து சேவை இயக்கவேண்டும் எனக் கோரிக்கையை எடுத்துவைத்தேன்.

அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் ஏற்கனவே போக்குவரத்து மிகுந்த நஷ்டத்தில் இயங்குகிறது, இதனைச் செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். உடனே தலைவர் கலைஞர் எழுந்து அரசுக்கு எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவில்லை மாணவர்கள் நலனுக்காக இதனைக் கொண்டுவருவோம் எனத் தெரிவித்தார்.

மேலும் அதனையடுத்து அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகச் சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கலைஞர் கொண்டுவந்தார். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது கல்விக்காக நிறைய உதவிகளைச் செய்திருக்கிறோம். தற்போது ஆட்சியில் இல்லையென்றாலும் கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தி.மு.க கல்விக்காகத் தொடர்ந்து பாடுபடும் எனத் தெரிவித்தார்.