DMK

குற்றசாட்டை நிரூபிக்காவிட்டால் எடப்பாடி பதவி விலக தயாரா? துரைமுருகன் சவால்!  

13 கோடி ரூபாயை கைப்பற்றியதாக எடப்பாடி நிரூபிக்காவிட்டால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சூலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, என்னைப் பற்றி பேசும்போது, புளுகு மூட்டைகளை என்மீது கொட்டியதை, நேற்று (2-5-2019) சென்னை பதிப்பில் வெளிவந்த மாலை நாளிதழ் ஒன்றில் பார்த்தபோது திரு.பழனிச்சாமியைப் பார்த்து, பரிதாபப்படுவதா? சிரிப்பதா? அல்லது ஆத்திரப்படுவதா? என்றே தெரியவில்லை.

அவர் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது ’துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் அவர்களுக்கு எந்தவகையில் வந்தது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.’ இவருக்கு (அதாவது எனக்கு) சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் அவர்களுக்கு எந்தவகையில் வந்தது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதுதான் எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பற்றி கண்டுபிடித்து கூறிய அரிய, பெரிய கருத்து. முதலமைச்சர் எடப்பாடி, இவ்வளவு விவரம் அற்றவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

முதலமைச்சர் எடப்பாடி கூறியது அத்தனையும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

1. எங்களுடைய வீடு - கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட போது, அவர்கள் எடுத்துச் சென்றது 10 லட்சம் ரூபாய் மட்டுமே. அவர் கூற்றுப்படி, 13 கோடி ரூபாய் அல்ல. ரூ.13 கோடி எடுத்த இடமும் எங்களுக்கு உரியது அல்ல. 2. 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் எடப்பாடி கூறுகிறார். இந்த சோதனையில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை. இதுதான் உண்மை. வருமான வரித்துறையினர் கொடுத்துள்ள பஞ்சன் நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்.

எல்லாவற்றையும் அறிந்து கொள்ளக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கின்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஏதும் தெரியாத சராசரி மனிதனைப் போல் பேசியிருப்பது கேலிக்குரியதாகும்.

கடைசியாக ஒரு சவால்! முதலமைச்சர் கூற்றுப்படி ,எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கத்தையும்; 13 கோடி ரூபாயையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக நிரூபித்தால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லாவிட்டால், முதலமைச்சர் பழனிச்சாமி, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? பாவம் அவரென்ன ராஜினாமா செய்வது! மக்கள்தான் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்களே?” என அவர் தெரிவித்துள்ளார்.