Cinema

TM கிருஷ்ணா விவகாரம் : “எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கலாம்” - நீதிமன்றம் உத்தரவு!

பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் சங்கீத கலாநிதி விருதை, 2005ம் ஆண்டு முதல் மியூசிக் அகாடமி வழங்கி வருகிறது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது, நடப்பாண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால், டி.எம்.கிருஷ்ணாவுக்கு, விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் மேலும், சுப்புலட்சுமி குறித்து டி.எம்.கிருஷ்ணா மோசமான வார்ததைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலில் அவரது பெயரில் விருது வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்படவில்லை எனவும், சிலைகள், நினைவு சின்னம் அமைக்ககூடாது என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விருதுக்குரியவர்கள் ஆங்கில நாளிதழ் குழுமம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த பத்தாண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் விருது வழங்கக்கூடாது என தற்போது மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், சொத்து உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும் ,விருதுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். தற்போது டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Also Read: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : “பொதுமக்கள் பயப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!