Cinema
ANIMAL: “இந்தியாவையும், பாலிவுட்டையும் தெலுங்கு மக்கள்தான் ஆள்வார்கள்” -தெலங்கானா அமைச்சர் சர்ச்சை பேச்சு
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர்தான் சந்தீப் ரெட்டி வாங்கா. தற்போது இவரது இயக்கத்தில் 'அனிமல்' என்ற படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், படக்குழு அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர் உள்ளிட்ட படக்குழுவினரோடு, சிறப்பு விருந்தினராக மகேஷ் பாபு, எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். மேலும் தெலங்கானா அமைச்சர் மல்லா ரெட்டியும் கலந்து கொண்டார்.
அப்போது திரை நட்சத்திரங்கள் படம் குறித்த பலவற்றை பகிர்ந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அம்மாநில அமைச்சர் மல்லா ரெட்டி பேசும்போது, இனி ஹாலிவுட், பாலிவுட், இந்தியா என அனைத்தையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போவதாக தெரிவித்தார். தற்போது இவர் பேசிய இந்த வீடியோ வெளியாகிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து தெலங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி பேசியதாவது, “ரன்பீர் கபூர் அவர்களே, நான் உங்களிடம் ஒன்று கூற வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பாலிவுட், ஹாலிவுட், இந்தியாவை தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள். நீங்களும் அடுத்த ஆண்டு ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்து விடுங்கள். ஏனென்றால், மும்பை பழையதாகி விட்டது; பெங்களூருவில் அதிகளவு ட்ராஃபிக் உள்ளது. இந்தியாவில் ஐதராபாத் மட்டுமே சிறப்பான நகரமாகும்.” என்றார்.
இவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், பாலிவுட் நடிகர் முன்னிலையிலேயே பாலிவுட்டை இனி தெலுங்கு மக்கள் தான் ஆளப்போவதாக கூறியதற்கு பாலிவுட் ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இணையவாசிகள் இவரது பேச்சுக்கு தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
-
"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !