Cinema
“தரம் தாழ்ந்த மனநிலை வேண்டாம்...” - ஞானவேல் ராஜாவுக்கு நடிகர் பொன்வண்ணன் கண்டனம் !
கார்த்தி, பிரியாமணி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'பருத்திவீரன்' கார்த்தியின் அறிமுகப்படமான இந்த படம், அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான அமீர் சுல்தான் இயக்கியுள்ளார். இந்த யுவன் இசையில் உருவான இந்த படம், இன்றளவும் நின்று பேசும் படமாக அமைந்துள்ளது.
கார்த்தியின் அறிமுக படமான இந்த படம், அவருக்கு திரைத்துறையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இந்த படத்தை உருவாக்கும்போது ஏற்பட்ட பல இன்னல்கள், முரண்பாடுகள் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. இந்த படத்தை தயாரித்ததாக கூறப்படும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குநர் அமீருக்கும் உள்ள பல்வேறு வாக்குவாதங்கள் தற்போது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்பட நிகழ்ச்சியில், சூர்யாவும், கார்த்தியும் அமீரையும், ஞானவேல் ராஜாவையும் வெகுவாக பாராட்டி இருந்தனர். இதைத்தொடர்ந்து Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் பற்றி அவதூறாக பேசியிருந்தார். மேலும் தன்னை ஏமாற்றிவிட்டது போல் பேசியிருந்த அவர், அமீரை பற்றி தரக்குறைவாகவும் பேசியிருந்தார். அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் இந்த பேச்சுக்கு சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த பிரச்னையில் அமீருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று பிரபல பேச்சாளரும், நடிகருமான கரு.பழனியப்பனும் குரல் எழுப்பினார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அமீரும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனது கண்டனங்களையும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அமீருக்கு ஆதரவாக குரலெழுந்து வரும் நிலையில், தற்போது அந்த படத்தில் நடித்த பொன்வண்ணன் அமீருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் பொன்வண்ணன் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு : “‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்! அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.
அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்!
பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.
இதனால்தான்,பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும்,வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.
படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும், பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக..
திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ!
வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..! இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்.." என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பொன்வண்ணன், 'பருத்திவீரன்' படத்தில் முத்தழகு (பிரியாமணி) கதாபாத்திரத்திற்கு தந்தையாகவும், பருத்திவீரன் (கார்த்தி) கதாபாத்திரத்திற்கு மாமாவாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!