Cinema
திரிஷா முதல் லோகேஷ் கனகராஜ் வரை... மன்சூர் அலிகான் பேச்சுக்கு குவியும் கண்டனம்.. முழு விவரம் !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் 'லியோ'. விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் சுமார் 600 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனியார் youtube சேனல்கள் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகளிடம் பேட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளரை சந்தித்தார். அப்போது லியோ படம் குறித்தும், திரிஷா குறித்தும் கருத்து தெரிவித்தார். அவர் திரிஷாவை குறிப்பிட்டு தெரிவித்துள்ள கருத்து தற்போது கண்டனங்களை எழுப்பியுள்ளது.
மேலும் நடிகை திரிஷாவுடன் தான் நடிக்க ஆசைப்பட்டதாக கூறிய அவர், எந்த மாதிரி கதாபாத்திரம் என்று அவரே ஒரு யூகத்திற்கு சென்று ஆபாசமாக நினைத்து பொதுவெளியில் பேசினார். அதோடு திரிஷாவுடன் ரேப் சீனில் நடிப்பேன் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் அது நடக்காமல் போனதால் வருத்தமாக உள்ளதாகவும் பேசியிருந்தார்.
முகச்சுழிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இவரது பேச்சு தற்போது அனைவர் மத்தியிலும் வலுத்த கண்டனங்களை எழுப்பியுள்ளது. தொடர்ந்து மன்சூரின் இந்த கருத்துக்கு நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அவருவருக்கதக்க வகையில் பேசிய ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், அவமரியாதை செய்யும் விதமாகவும், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் மோசமாக உள்ளது.
என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவரைப் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் இணைந்து இதுவரை நான் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் அவருடன் நடிக்க மாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கு இழுக்கு" என்று குறிப்பிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மன்சூர் அலிகான் கூறிய கருத்துகள் மோசமானதாகவும் கோபமடைய வைக்கும் வகையில் உள்ளது. பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இதைச் சமரசம் செய்து கொள்ளவே முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!