Cinema
“பாத்ரூம் தண்ணில காபி போட்டு குடித்தேன்”:துபாய் சிறையில் சிக்கவைக்கப்பட்ட பாலிவுட் நடிகை குமுறல்-பின்னணி?
பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் கிறிசன் பெரேரா (Chrisann Pereira ). இவர் கடந்த 2020-ல் வெளியான அலியா பட், ஆதித்ய ராய், சஞ்சய் தத் நடித்த 'சதக் 2' படத்தின் நடித்து பிரபலமானார். இந்த சூழலில் இவர் சர்வதேச வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே இதன் ஒத்திகை ஷூட்டிங் துபாயில் உள்ள ஷார்ஜாவில் நடைபெறவுள்ளதால், கடந்த 1-ம் தேதி துபாய்க்கு சென்றார்.
அங்கே ஷார்ஜாவில் இவர் இறங்கியதும், இவரை சோதனை செய்த அதிகாரிகள் இவரிடம் போதை பொருள் இருந்ததாக கூறி கைது செய்தனர். துபாயில் போதை பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். அதன்பேரில் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து மும்பை போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கிறிசன் பெரேரா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஆண்டனி என்பவர்தான் இந்த சம்பவத்தில் நடிகையை சிக்க வைத்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கையில் கடந்த ஆண்டு கிறிசன் பெரேரா தாய்க்கும், ஆண்டனிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 2, 3 முறை இந்த மோதல் தொடர்ந்துள்ளதால் அவரை பழிவாங்க எண்ணியுள்ளார் ஆண்டனி.
எனவே கிறிசன் பெரேரா துபாய் செல்வதை அறிந்த ஆண்டனி, கேக் செய்யும் தொழில் செய்யும் தனது நண்பர் ராஜேஷ் உதவியுடன் போதை பொருளை கிறிசனிடம் தெரியமால் கொடுத்துள்ளார். அதுவும் கிறிசன் ஷார்ஜாவுக்குச் செல்வதற்கு மும்பை விமான நிலையம் புறப்பட்டு செல்லும்போது, பாதிவழியில் மறித்து அவரிடம் போதைப்பொருள் இருந்த டிராபியை ராஜேஷ் கொடுத்து அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், இது குறித்த விவரங்களை மும்பை போலீசார், தூதரகம் உதவியோடு ஷார்ஜா அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் அவரை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்தது. இந்த நடிகை சுமார் 26 நாட்களாக ஷார்ஜா சிறையில் இருந்துள்ளார். இதையடுத்து அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டு தற்போது மும்பை வந்தடைந்துள்ளார்.
மும்பை வந்ததும் நடிகை கிறிசன், தான் சிறையில் இருக்கும்போது அனுபவித்த கொடுமைகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த கடிதத்தில், “பேனாவையும் காகிதத்தையும் கண்டு பிடிக்க எனக்கு 3 வாரங்கள் ஆகிவிட்டது. கழிவறை நீரில் காபி போட்டு குடித்து, துணி துவைக்கும் பவுடரில் தலைக்கு குளித்த பிறகு நான் சில பாலிவுட் படங்களை பார்த்தேன்.
அதை பார்த்த போது என்னுடைய கனவுதான் என்னை இதுவரை கொண்டு வந்துள்ளது என்பதை உணர்ந்தேன். நான், இந்தியராக இருப்பதற்கும் இந்தியாவை சேர்ந்த திரைத்துறையில் இருப்பதையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷார்ஜாவில் போதை பொருள் வழக்கில் சிக்கவிக்கப்பட்ட பாலிவுட் நடிகை சிறை சென்றபோது, அங்கே தான் அனுபவித்த கொடுமைகளை வெளியே தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் கிறிஸன் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
பட்டப்படிப்பு வரை முடித்துள்ள ஆண்டனி பால், கடந்த 2012 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் இருந்துள்ளார். பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ள இவர், கேக் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அது மட்டுமின்றி மறுபக்கம் போதைப்பொருள் விற்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இவர் இதுபோல் பலரை போதை பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளார்.
சிக்கவைக்கும் நபருக்கு தெரியாமல் சிறிய அளவிலான போதை பொருளை அவரிடம் கொடுப்பார் அல்லது அவர்கள் பைக்குள் போட்டுவிடுவார். பின்னர் இவரே சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவலும் தெரிவிப்பார். முன்னதாக இதே போல் இவரால் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகை கிறிஸன் 5-வது நபர் ஆவார். தற்போது ஆண்டனியும், அவரது நண்பர் ராஜேஷும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!