Cinema
“ஆஸ்கர் வாங்குவதைவிட இதுதான் முக்கியமானது..” - CII விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு !
CII தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தக்ஷின் மாநாடு நடத்தப்படுகிறது. தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்தாண்டு இன்றும் (ஏப்., 19) நாளையும் (ஏப்., 20) நடைபெறவுள்ளது.
கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், திரை பிரபலங்கள் மணிரத்னம், தனுஷ், கார்த்தி, விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரம்யா, ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
அந்த வகையில் இன்று தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் மேடையில் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் தென்னிந்திய சினிமா வெற்றி குறித்து சிறப்பாக பேசினார். இதுகுறித்து பேசிய அவர், “கலைக்கு மொழி இல்லை, எல்லைகள் இல்லைனு சொல்வாங்க. ஆனா கலைக்கு நிச்சயமா மொழி இருக்கு, கலாச்சாரம் இருக்கு, எல்லைகள் இருக்கு. ஆனால் கலையை நுகர்பவர்களுக்கு அந்த எல்லைகள் இல்லை.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் இதுதான் நடந்தது. நம்ம எல்லாருமே வீட்டில் முடங்கிக் கிடந்தோம். என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் நாம், எல்லா ஓடிடி தளங்களிலும் இருந்து எல்லாவிதமான படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். இதன்மூலம் ஒரு எளிய மனிதனும் வெவ்வேறு விதமான சினிமாவை பார்த்து அதை பற்றி புரிந்துகொள்வதற்கான ஒரு இடம் கிடைத்தது.
லாக்டவுனுக்கு பிறகு தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் பழக்கம் மாற ஆரம்பித்துள்ளது. காந்தாரா, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பான் இந்தியா அளவில் வெற்றிபெற்றதற்கு காரணம் அவை அனைத்துமே அந்த அந்த மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள், அவர்களது கலாச்சாரம், அவர்களது நடிகர்கள் என அவங்க ஸ்டைல்ல எடுக்கப்பட்ட படம். அதனால் அவை உலகளவில் ரீச் ஆகின.
நம்முடைய கதைகளை நாம் சொல்கிறோம். ஆனால் அதற்கான உணர்வு எல்லை கடந்து ரீச் ஆகிறது. ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை. மெயின்ஸ்டிரீம் சினிமா பண்ணி ஆஸ்கர் வாங்குறது தான் முக்கியம். நம்ம மக்களுக்கான படம், நம்ம கொண்டாடுற படத்தை, ஆஸ்கர் வரை கொண்டு சென்று அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அதனை தான் நான் ஒரு புரட்சியாக பார்க்கிறேன். தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படம் பார்த்தேன் எனக்கு ரொம்ப புடித்திருந்தது. அதில் காட்டப்பட்டுள்ள எமோஷன் அருமையாக இருந்தது.
தென்னிந்திய படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாம் நம்முடைய கதைகளை, நம்ம மக்களுக்கான கதைகளை சொல்வதால் தான் அந்த தாக்கம் இருக்கிறது. ஆஸ்கர் வாங்குவதைவிட, நம் மக்கள் நாம் எடுக்கும் படங்களை பார்த்து அந்த படங்களை கொண்டாடி, அதன் பிறகு அது அகில உலக அளவில் கவனம் பெறுவதுதான் இதில் அதி முக்கியமானது. நாம் நம்முடைய அடையாளங்களோட, நம்முடைய தனித்துவங்களோட, நம்முடைய பெருமைகளோட படங்கள் பண்றது தான் நம்முடைய இந்த வளர்ச்சிக்கு காரணம். இதே நிலை தொடரும் என நம்புகிறேன். மற்ற திரையுலகம் அதை பின்பற்றாததால் பின்னடைவை சந்திக்கின்றன” என வெற்றிமாறன் கூறினார்.
Also Read
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!
-
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
-
”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!