Cinema

பட தலைப்பாக வைக்கப்பட்ட பாடல் வரி.. எதிராக போடப்பட்ட வழக்கு: நீதிமன்றம் வரை சென்று நீதிபெற்ற நடிகை ரம்யா!

தமிழில் 2004-ம் ஆண்டு சிம்பு, விஜயகுமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. முன்னதாக கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் குத்துவை தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மொழிகளில் கவனம் செலுத்தி திவ்யா, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி-யாகவும் பதவி வகித்தார். தனது நடிப்பை விடாத திவ்யா, தற்போது கன்னட திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். இருந்த போதிலும், தனது கட்சி பணிகளையும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அவ்வப்போது சமூக கருத்தையும் பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் இவர், அண்மையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது சினிமா ஒருபுறம், அரசியல் ஒருபுறம் என்று செயலாற்றி வருகிறார்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். 'AppleBox Studios' என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்ட இவர், அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படம் ஒன்றை தயாரித்தார். அந்த படத்திற்கு 'சுவாதி முத்தின மளே ஹனியே' (Swathi Muttina Male Haniye) என தலைப்பு வைக்கப்பட்டது.

இந்த பெயரானது, 'பன்னத் கெஜ்ஜே' என்ற படத்தில் இடம்பெற்ற பாடலின் வரி ஆகும். எனவே இந்த தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்தின் இயக்குநர் ராஜேந்திர சிங் பாபு பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தான் 30 வருடங்களுக்கு முன்னர் இயக்கிய 'பன்னத் கெஜ்ஜே' என்ற படத்தில் இந்தப் பாடல் வரி இடம் பெற்றிருந்ததாகவும், பின் இந்த பாடல் வரி கொண்ட டைட்டிலை வைத்து ஒரு படம் இயக்கி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தொடர்ந்து அந்த படத்தை இயக்கி கொண்டிருக்கும்போதே அதில் கதாநாயகனாக நடித்த அம்பரீஷ் திடீரென இறந்து விட்டதால், அதை தொடர முடியவில்லை என்றும், எனவே இந்தத் தலைப்பை ரம்யா தனது படத்துக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்ந்து சில ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், ரம்யா தரப்பில் இருந்து இந்த படம் முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதோடு இந்த வழக்கின் தடையை நீக்காவிடில் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இப்போது வெளிவரவிருக்கும் திரைப்படத்தை ரம்யா தரப்பு முடித்துவிட்டார்கள், ஆனால் வழக்கு தொடுத்தவர்களின் படம் இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக கூறி இதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி ரம்யாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

இதனால் நீண்ட காலங்களாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இதனால் ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Also Read: ‘விடுதலை’ படத்தின் தாக்கம்.. கோபப்பட்ட மனைவி, மகள்: தியேட்டரிலேயே அடி வாங்கிய சேத்தன் - எதனால் தெரியுமா ?