Cinema

தனக்காக வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர்.. அதன் முன் நின்றே மாஸான போட்டோ வெளியிட்ட ‘அவன் இவன்’ பட நடிகர்!

சென்னை ஆவடியை சேர்ந்த நடிகர் ஜி.எம்.குமார். ஆரம்பத்தில் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், அதன்பிறகு லிவிங்ஸ்டனுடன் பணியாற்றினர். சில படங்களில் பணியாற்றி வந்த இவர், பாரதிராஜா இயக்கத்தில் 1993-ல் வெளியான கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் திரையில் தோன்றினார்.

அதன்பிறகு சில படங்களில் துணை நடிகராக நடித்து வந்த இவர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினர். அப்படி இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தவை வெயில், தீ, மிளகா என உண்டு. இந்த வரிசையில் முக்கியமான ஒன்றாக இருப்பது பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' திரைப்படம்.

ஜமீன்தாராக இந்த படத்தில் நடித்த இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதிலும் நாமினேட் ஆனார். தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வரும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' படத்திலும் துரியோதனன் என்ற கதாபத்திரத்தில் நடித்தார்.

இப்படி தற்போது வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் இவர், நடிப்பதற்கு முன்பே இயக்குநராக அவதாரம் எடுத்தார். அறுவடை நாள், பிக் பாக்கெட், இரும்பு பூக்களும், உருவம் ஆகிய படங்களை இயக்கினார். மேலும் பிரபு நடிப்பில் வெளியான கன்னி ராசி, மை டியர் மாரத்தாண்டன் படங்களுக்கும், கமலின் காக்கி சட்டை படத்துக்கும் இவர்தான் எழுத்தாளர் ஆவர்.

வெள்ளித்திரை மட்டுமின்றி, தேவதையை கண்டேன், பூவே உனக்காக, செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் இவர், தனது புகைப்படம் வைக்கப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த பேனரில் அவர் பெயர் காரியமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த 19-ம் தேதி தனது ட்விட்டர் அவர் வெளியிட்ட பதிவில், "வந்தது தெரியும் போவது எங்கே.. வாசல் நமக்கே தெரியாது.. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்.. இந்த மண்ணில் நமக்கே இடமேது?.. வாழ்க்கை என்பது வியாபாரம்.. வரும் ஜனனம் என்பது வரவாகும்.. அதில் மரணம் என்பது செலவாகும்.. போனால் போகட்டும் போடா..." என்ற கண்ணதாசன் பாடல் வரிகளை குறிப்பிட்டு, தான் சடலமாக இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்தார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “என்னை இவங்க கொன்னுட்டாங்க..” - சாமி பட வில்லன் நடிகர் Video வெளியிட்டு உருக்கம்.. என்ன நடந்தது ?