Cinema

குஷியாக பாட்டு பாடிக்கொண்டிருந்த பென்னி தயாள்: சட்டென்று பின் தலையில் மோதிய ட்ரோன் -அடுத்து என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்தான் பென்னி தயாள். அபுதாபியை சொந்த இடமாக கொண்ட இவர், தமிழில் முதல் முறையாக 2002-ல் ரஜினி நடிப்பில் வெளியான 'பாபா' படத்தில் பாடகராக அறிமுகமானார். "மாயா.. மாயா.." என்ற பாடலை பாடிய இவர், அதன்பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

இருப்பினும் தமிழ், இந்தியில் மட்டுமே இவர் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் சூர்யாவின் 7-ம் அறிவில் இடம்பெற்ற "ஓ ரிங்கா.." பாடல், விஜயின் தலைவா படத்தில் இடம்பெற்ற "தமிழ் பசங்க..", அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற "உனக்கென்ன வேண்டும் சொல்லு.." பாடலை உள்ளிட்ட பிரபலமான ஹிட் பாடல்களை இவர்தான் பாடியுள்ளார்.

அண்மையில் கூட புஷ்பா, RRR போன்ற டப்பிங் படத்தின் தமிழ் பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. அதோடு இவர் அவ்வப்போது கான்செர்ட்டும் செய்வார். தொடர்ந்து இவரது பாடல்களை கேட்க ரசிகர்கள் கூட்டமும் அலைமோதும். அந்த வகையில் அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பாடல் பாடிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் என அனைவரும் புகைப்படம் வீடியோ என எடுத்துக்கொண்டிருந்தனர்.

மேலும் இவரது நிகழ்வை ட்ரோன் கேமரா மூலம் படப்பிடிக்கப்பட்டு கொண்டிருந்தது. இவர் மேடையில் உற்சாகமாக பாட்டு கொண்டிருந்த சமயத்தில், இவரை படம்பிடித்துக்கொண்டிருந்த ட்ரோன் கேமரா பென்னி தயாளின் பின் தலையில் சட்டென்று பட்டது. இதில் அவர் மேடையில் வைத்தே தலையை பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்தார்.

சிறு காயம் என்று நினைத்திருந்த நிலையில், அவர் அமர்ந்தவாறே தனது தலையை தேய்த்துக்கொண்டிருந்தார். இதையடுத்து அருகிலிருந்த ஒருங்கிணைப்பாளர்கள் அவரை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து பென்னி தயாள் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சென்னை விஐடி கல்லூரி நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து நீங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கு நன்றி. முதலில் அன்று என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன்.

ட்ரோன் கேமாராவில் உள்ள விசிறிகள் என்னுடைய பின் தலையில் வந்து மோதியது. அதனை தடுக்க முயன்ற போது என்னுடைய இரு விரல்களிலும் காயம் ஏற்பட்டது. நான் இப்போது நலம்பெற்று வருகிறேன். இந்த சம்பவத்தின் மூலமாக அனைவருக்கும் நான் 3 விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.

1. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள், நிகழ்ச்சி ஏற்பட்டாளரிடம் ட்ரோன்கள் உங்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி,அந்த விதிமுறையை ஒப்பந்தத்தில் சேர்க்க சொல்லுங்கள்.

2. சான்றிதழ் பெற்ற தொழில்முறை ஆபரேட்டர்களை மட்டுமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும்.

3. இந்த செய்தி, ட்ரோன் ஆபரேட்டர்களுக்கு நாங்கள் வெறும் பாடகர்கள்தான்; நாங்கள் விஜய்யோ, அஜித்தோ, சல்மான் கானோ அல்ல.. ஆகையால் நீங்கள் மிகவும் நார்மலாகவே எங்களை ஷீட் செய்யலாம்” என்றுள்ளார்.

Also Read: ”மூணு கடல் கூடும் குமரி கண்டத்துல”.. தெறிக்கவிடும் லுக்கில் சிலம்பரசனின் ’பத்து தல’ பட டீசர் வெளியானது !