Cinema

காதலுறவில் சுவாரஸ்யம் குறைகிறதா ? உறவு எப்போது சலிப்பை தரும்.. அதை தவிர்ப்பது எப்படி ?

காதலுறவில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டால் என்ன செய்வது?

காதலுறவோ திருமண உறவோ அததற்கென தனிக் களம் உண்டு; தனி இலக்கணம் உண்டு. இரண்டிலுமே இருக்கும் ஆண் - பெண் இடையிலான உறவில் சுவாரஸ்யம் இல்லாமல் போனால் என்ன செய்வது?

முழுக்க உங்கள் விருப்பம்தான். சிலருக்கு சுவாரஸ்யமின்மையே சுவாரஸ்யம் கொடுக்கும். அதாவது குறை சொல்லியே பரிசு பெரும் புலவர்கள் போல. இன்னும் சிலருக்கு சுவாரஸ்யமின்மை வசதியாக இருக்கும். ஏனெனில் அவர்களும் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பார்கள்.

இவை அல்லாமல் சுவாரஸ்யம் இல்லாமல் சுவாரஸ்யம் வேண்டுமென விரும்பினால், சம்பந்தப்பட்டவர்களிடம் பேசலாம். வாழ்க்கையை புதுவகையில் வாழ முற்படலாம். சிறுசிறு மாற்றங்களால் சுவாரஸ்யத்தை கூட்டலாம். ஆனால் இருவரின் ஒத்துழைப்பு வேண்டும்.

புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், எந்த உறவும் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பு கொடுக்கக்கூடியதே. அம்மா, அப்பா, தங்கை, அக்கா, அண்ணன், நண்பர்கள் என எல்லாவகை உறவுகளிலும் சலிப்பு ஏற்படக்கூடியதுதான். அவற்றை தொடர நாம் பயன்படுத்தும் சமூக சிமெண்ட்டுகள்தான் அன்பு, பாசம், உறவு, உரிமை எல்லாம். அங்கெல்லாம் நாம் உறவை முறித்துக் கொள்வதில்லை. நம்மை தகவமைத்து கொள்கிறோம். பொருந்தி போய்விடுகிறோம்.

ஏனெனில் இவற்றில் எதுவும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நேரடியாக அல்லது பெருமளவுக்கு செல்வாக்கு செலுத்தக்கூடியவை அல்ல. விதிவிலக்குகளாக சில இருக்கலாம். ஆனால் பொதுப்போக்கு இப்படித்தான்.

உங்கள் வாழ்வில் நேரடியாக, பெருமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போகும் உறவு சலிப்பு தருகிறதெனில் பேசி பார்க்கலாம். அந்த நபர் மீது உங்களுக்கு அன்பு இருக்கும்பட்சத்தில் பொருந்திப்போக முயற்சி செய்யலாம். ஆனால் எந்த வகையிலும் உங்களின் விருப்பங்கள் பொருட்படுத்தப்படவில்லை என்றால், உங்களின் மிச்ச வாழ்க்கை முழுவதும் பாலைவனமாக தென்படுகிறது எனில் நீங்கள் முறிவை பற்றி பேசத்தொடங்கலாம். ஆனால் அது முறையான முறிவாக இருக்க வேண்டும்.

முக்கியமான ஒரு விஷயமும் இருக்கிறது. காதலுறவு வேறு, திருமண உறவு வேறு. காதலுறவில் காதல் மட்டுமே பிரதானம். திருமண உறவில் குடும்பம்தான் பிரதானம்.

திருமணத்துக்கு பின் உருவாகும் குடும்பம் என்கிற அமைப்பு அடிப்படையில் பொருளாதார அலகு; economic unit!

திருமணம் செய்த பிறகு இருவரும் ஒரு வீட்டில் வாழ்வீர்கள். வீட்டுக்கு வாடகை, முன் பணம் எல்லாம் உண்டு. அதை இருவரில் யார் கொடுப்பது அல்லது எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதிலிருந்து பொருளாதாரம் தொடங்குகிறது. திருமணத்துக்கான ஒப்புதல் பெறும் வரையில் வேண்டுமானால் காதல் உந்து விசையாக இருக்கலாம். ஒப்புதலுக்குப் பிறகு திருமணப் பேச்சிலிருந்தே இரு தரப்பின் பொருளாதார விஷயங்கள்தாம் அதிகம் அடிபடும்.

திருமண உறவில் பிறக்கும் குழந்தை, அதன் பாதுகாப்பு, படிப்பு, வளர்ப்பு, உணவு என திருமண உறவில் எல்லாமுமே பொருளாதாரம்தான். எனவே காதலுறவின் சுவாரஸ்யத்தை அப்படியே திருமண உறவிலும் எதிர்பார்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

எதற்கும் ஒருமுறை Revolutionary Road படம் பார்த்துவிடுங்கள்.

Also Read: #LGM || கிரிக்கெட் சாம்பியன் யோகி பாபுவுக்கு தனது கிரிக்கெட் பேட்டை கொடுத்த MS தோனி.. - காரணம் என்ன ?