Cinema

காரை நிறுத்தி மாடர்ன் தியேட்டர்ஸ் முன் Selfie எடுத்த முதல்வர்:கலைஞர் வாழ்ந்த இடத்தில் நின்று நெகிழ்ந்த CM

மறைந்த முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், தனது ஆரம்ப காலத்தில் முதன்முதலாக சம்பளம் வாங்கி வசனம் எழுதி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்தான் மாடர்ன் தியேட்டர்ஸ். அதன் நினைவாக கலைஞர் இருக்கும்போது சேலம் செல்லும்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு சென்று வருவார். அந்த வகையில் இன்று சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டார்.

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்திற்காக இன்று சேலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் மார்டன் தியேட்டர்ஸ் வழியே சென்றுள்ளார். அப்போது இதனை கண்ட முதலமைச்சர் தனது காரை நிறுத்தி, இறங்கி தியேட்டர்ஸ்-ஐ புகைப்படமும், அதன் முன்பு நின்று செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "T.R.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான #SalemModernTheatres-இன் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன். திரையுலகின் பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் : -

சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ளது. 'மாடர்ன் தியேட்டர்ஸ்'. டிஆர்எஸ் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சுந்தரம் என்பவரால் இது 1935-ல் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்பட கூடம் என்றால் அது இதுதான்.

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு போனதற்கு பெரும்பங்கு ஜெமினி ஸ்டுடியோஸ் போன்றவைக்கு உண்டு என்றால், தமிழ் சினிமாவில் கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற சிறந்த கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கிய பெருமை 'மாடர்ன் தியேட்டர்ஸ்'க்கு உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம்தான் முதன்முதலாக தமிழில் வண்ணப்படம் வெளியிட்ட பெருமையும் இதையே சாரும்.

TRS

மாடர்ன் தியேட்டர்ஸும் - கலைஞரும், எம்.ஜி.ஆரும் :-

ஆம்.., 1956-ல் எம்.ஜி.ஆர். பானுமதி நடிப்பில் வெளியான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படமே முதல் தமிழ் வண்ணப்படம் என்ற பெருமை பெற்றது. இந்த படத்தை டி.ஆர்.எஸ் இயக்கினார். தொடர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனம் சுமார் 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

தமிழில் ஆரம்ப காலத்தில் தமிழும், வடமொழியும் கலந்த வசனங்களும், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகளுமே திரைப்படங்களில் காணப்பட்டது. இவற்றையெல்லாம் முறியடித்து புதிய சினிமாவை கொண்டு வந்த பெருமை சிறந்த வசனகர்த்தா கலைஞரை சாரும் என்று சொன்னால் அது மிகையாகாது. கலைஞரின் வசனங்கள் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.

அவரது கைவண்ணத்தில் உருவான ஒவ்வொரு வசனமும் எளியோர்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் இருக்கும். ஆரம்பத்தில் தந்தை பெரியாரின் குடியரசு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது கோவை ஜூபிடர் நிறுவனம் எடுத்த ராஜகுமாரி திரைப்படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

திரைப்படத்திற்கு எழுதிக்கொடுப்பதை தொடர்ந்து தேவி நாடக சபைக்காக குண்டலகேசி காப்பியத்தை மையப்படுத்தி மந்திரகுமாரி என்ற நாடகத்தை எழுதினார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த நாடகத்தினால், கலைஞருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் 500 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.

அங்கே பணியாற்றும்போதுதான் கலைஞருக்கு கண்ணதாசன், மருதகாசி உள்ளிட்டோரது நட்பு கிடைத்தது. நாடக வடிவில் உருவான மந்திரிகுமாரி, திரை வடிவம் பெற்று பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திலும் எம்.ஜி.ஆரே நடித்தார். 'மந்திரிகுமாரி' பட டைட்டிலில்தான் முதன் முதல் கதை வசனம் மு.கருணாநிதி என்று போடப்பட்டது.

இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கலைஞரை அழைத்து பலரும் பாராட்டினர். மேலும் கலைஞரை தங்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அதன்படி இவர் 'மணமகள்' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்கு கலைஞர் வாங்கிய சம்பளம் 10,000 ரூபாய். கலைஞரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது 1952-ல் வெளியான 'பராசக்தி' திரைப்படம்.

சிவாஜியின் முதல் படமான இந்த படத்திற்கு கலைஞர் எழுதிய வசனம் இன்றும் நின்று பேசப்படுகிறது. இப்படி கலைஞருக்கு திரைத்துறையில் வெற்றிமேல் வெற்றி கிட்டியதற்கு வித்தாக அமைந்தது இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

1935-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் முதலில் தயாரிக்கப்பட்ட படம் 'சதி அகல்யா'. திறமைக்கு முழுமையாக அங்கீகாரம் வழங்கிய இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் 1982-ல் இருந்து செயலற்று போனது. தமிழ் சினிமாவுக்கே முன்னோடி இந்த நிறுவனம். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களி தயாரித்துள்ள இந்த மார்டன் தியேட்டர்ஸ். எம்.ஜி.ஆர், கலைஞர், கவிஞர் கண்ணதாசன், டி.ஆர்.மகாலிங்கம், ஜானகி ராமச்சந்திரன், என்.டி.ஆர். முரசொலி மாறன் என்று பல பெரிய ஆளுமைகள் புழங்கிய இடமாகும்.

தற்போது அந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் 'தி மாடர்ன் தியேட்டர்ஸ்' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நுழைவு வளைவு மட்டும் அப்படியே உள்ளது. இந்த நுழைவு வாயில் அமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், தற்போது அதனை புதுப்பொலிவுடன் வடிமவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'சமூகநீதி' என்ற சொல் எரிச்சலைத் தருகிறதா? ஆளுநரே முதலில் அம்பேத்கரை அறிந்துகொள்ளுங்கள்.. முரசொலி தாக்கு !