Cinema
“இதுதான் இரண்டாம் பாகம்..” காந்தாரா அடுத்த பாகம் குறித்த கேள்விக்கு ரிஷப் ஷெட்டி சொன்ன பதில் என்ன ?
கடந்த ஆண்டு தென்னிந்தியாவில் வெற்றி ஈட்டிய படங்களில் ஒன்றுதான் 'காந்தாரா'. இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் இது. கன்னட திரைப்படமான இப்படம் பொதுமக்கள் திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது. IMDB யில் இப்படத்திற்கு 9.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கன்னட திரையுலகில் அதிக ரேட்டிங் பெற்ற படமாக திகழ்கிறது.
சுமார் 16 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், 407 கோடிக்கு அதிகமான வசூலை ஈட்டிய பெரிய சாதனை படைத்தது. இந்த படத்துக்கு இந்தியா முழுக்க எந்த விமர்சனமும் இன்றி பாராட்டுக்கள் மட்டுமே வந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சில எழுத்தாளர்களும், பொதுமக்களும் இந்த படத்தில் இருக்கும் குறைகளை விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.
மேலும், மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டு ரசிகர்களை இந்த படம் பெரிதாக கவரவில்லை. இதைத்தான் கேரளாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் வசூலும் பிரதிபலிக்கிறது. இந்த படம் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
இந்த படத்தின் பாடலும் சில சர்ச்சைகளில் சிக்கினாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் 'காந்தாரா' படமும் இடம்பெற்றுள்ளது. தென்னிந்திய படங்களில் சிறந்த படமாக இது திகழ்ந்தது. இதையடுத்து இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்க்கு ரிஷப் ஷெட்டி, இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் வரும் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்தின் கதை எதை மையமாக வைத்து எடுக்கப்படும் என்பது குறித்து ரிஷப் ஷெட்டி தற்போது தெரிவித்துள்ளார். காந்தார படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி காந்தார அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இப்போது வெளியான இந்த 'காந்தாரா' படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் காந்தாராவின் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது.காந்தாரா படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்." என்றார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?