Cinema

“சாதி எனது அடையாளம் இல்லை”: ஜனனி, பார்வதியை தொடர்ந்து சம்யுக்தா.. நடிகையின் பேச்சுக்கு குவியும் பாராட்டு!

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சம்யுக்தா. 2016-ல் திரையுலகில் அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 2018-ல் கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'களரி' என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஜூலை காற்றில் என்ற படத்திலும் நடித்தார்.

இதையடுத்து மீண்டும் மலையாள திரை உலகில் பிசியாக இருந்த இவர், மலையாளம் மற்றும் தமிழில் வெளியான 'எரிடா' என்ற படத்திலும் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் வெங்கி அத்லுரி இயக்கத்தில் தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இதில் இந்த படத்தின் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அவர், "நான் பாலக்காட்டு பொண்ணு. அதனால் எனக்கு தமிழ் சரளமாக பேச வரும். தமிழ் படங்களில் நடிக்கும் ஆசை இருந்தாலும் அதற்கான வாய்ப்பு வரவில்லை. வந்த வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை. சில வாய்ப்புகளை நான் நிராகரித்தேன். தனுஷுடன் வரவேண்டும் என்பதற்காத்தான் இவைகள் நடந்ததாக நான் கருதிக் கொள்கிறேன்.

இந்த படத்தில் அரசு பள்ளி பயாலாஜி ஆசிரியையாக நடித்திருக்கிறேன். இந்த படம் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் படம். நான் பிளஸ் 2 வரைதான் படித்தேன். அதற்கு பிறகு நடிக்க வந்துவிட்டேன். எல்லோரும் படிக்க வேண்டும். ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. எனக்கு நடனம், நடிப்பு பிடித்தது; எனவே நான் அந்த துறைக்கு வந்து விட்டேன்.

எனது பெயர் சம்யுக்தா தான்; ஆனால் 'மேனன்' என்று ஜாதி அடைமொழி போட்டுக் கொள்வதை நான் எப்போதும் விரும்புவதில்லை. படங்கள் உட்பட எனது பெயருக்கு பின்னால் இருக்கும் 'மேனன்' என்ற சாதி அடையாளத்தை நீக்கச் சொல்லிவிட்டேன். சாதி அடையாளத்தை போட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

மலையாள சினிமாவில் ஏகப்பட்ட சம்யுக்தாக்கள் இருப்பதால் மீடியாக்கள்தான் என்னை தனியாக சுட்டிக்காட்ட மேனனை இணைத்து கொண்டார்கள். தயவு செய்து என்னை மேனன் என்று ஜாதி அடையாளப்படுத்தாதீர்கள். எனக்கு ஜாதியே பிடிக்காது. என்னை சம்யுக்தா என்று அழைத்தால் போதுமானது" என்றார்.

ஜனனி

சம்யுக்தாவின் இந்த பேச்சுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நடிகை ஜனனி, தனது பெயரை ஜனனி மட்டுமே அழைக்க வேண்டும் என்றும், ஜனனி ஐயர் என்று அழைக்க வேண்டாம் என்றும், சாதி எனது அடையாளம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பார்வதி

மேலும் மலையாள நடிகை பார்வதியும், ’நான் எப்போதுமே ஜாதி அடையாளத்தை விரும்புவதில்லை. திடீரென்று எனது பெயருக்குப் பின்னால் மேனன் என்று சேர்க்கின்றனர். நான் இதை விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார். இப்படி நடிகைகள் தங்களது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியின் அடையாளங்களை தவிர்ப்பது பொதுமக்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: ‘படிப்பு தான் முக்கியம்’ : வாத்தி விழாவில் தனுஷ்.. இவரா இப்படி? எதனால் இந்த மாற்றம்!- ரசிகர்கள் ஆச்சர்யம்