Cinema

இனி பாஸ்வேர்ட் பகிர்ந்தால் இத்தனை ரூபாய் கட்டணம்.. வெளியான அறிவிப்பால் ஆடிப்போன NETFLIX பயனர்கள் !

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது டிஜிட்டல் தளங்கள்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி சினிமா முதல் சீரியல் வரை பலவற்றையும் பார்த்து தங்கள் பொழுதுகளை கழித்தனர்.

அப்போதுதான் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5 போன்ற ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் எப்போது வேண்டுமானாலும் படங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் பலரும் இந்த ஓடிடி தளங்களைப் பயன்படுத்தத் துவங்கினர்.

மக்களும் இதனை ஒரு மாதம், 6 மாதம், ஒரு வருடம் என சந்தா பணம் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தனது கணக்கை நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தவும் கொடுத்து வருகின்றனர். இதன்மூலம் ஒரு கட்டணத்தில் பலரும் பயன்படுத்தி வந்தனர். இது ஓடிடி தளங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால் ஒரு கணக்கை 5 பேர் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய திட்டத்தைக் கொண்டு வரப்பட்டது.

இது ஒவ்வொரு ஓடிடி தளத்திற்கு ஏற்ப திட்டங்கள் உள்ளன. இதில் தங்களுக்குப் பிடித்த திட்டங்களைச் சந்தா பணம் செலுத்தி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தைத்தான் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கூட கொரோனாவிற்கு பிறகு நெட்ஃப்ளிக்ஸ் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால்தான் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு என்று சிறப்புச் சலுகையையும் நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகம் செய்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 2023ம் ஆண்டு முதல் நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் தனது கணக்கில் பாஸ்வேர்டை வேறு யாருக்கும் பகிர்ந்து கொள்ள முடியாது.

உலகம் முழுவதும் சுமார் 222 மில்லியன் பேர் நெட்ஃப்ளிக்ஸ் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 100 மில்லியன் பேர் தங்களின் கணக்குகளை பலருக்கும் பகிர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் விதமாகத்தான் நெட்ஃப்ளிக்ஸ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி NETFLIX சந்தாதாரர்கள் தங்கள் பாஸ்வேர்டை ஷேர் செய்தால் அவர்களிடமிருந்துதனி கட்டணம் வசூலிக்கப்படும் என கடந்த மாதம் NETFLIX நிறுவனம் அறிவித்தது. அதேபோல் கணக்கைப் பகிர்ந்து கொள்வது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நெட்ஃப்ளிக்ஸ் எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில் தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக NETFLIX கட்டண விவரத்தை அறிவித்துள்ளது. அதன்படி NETFLIX சந்தாதாரர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு யாருக்கேனும் ஷேர் செய்தால் அவர்களிடமிருந்து ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும் என NETFLIX நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டமானது வரும் ஏப்ரல் மாதம் முதல் உலகம் முழுவதும் அமலுக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இதனை சோதனை செய்யும் விதமாக சிலி, பெரு, கோஸ்ட்டா ரிகா உள்ளிட்ட சில பகுதிகளில் அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் NETFLIX பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Also Read: Spotify-ஐ விட்டுவைக்காத layoff.. 400 பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு: பீதியில் ஊழியர்கள்!