Cinema

சூடு பிடிக்கும் மந்தி பிரியாணி விவகாரம் : “நானும் இதுபோல் பாதிக்கப்பட்டேன்..” - மனம் திறந்த இயக்குநர் !

தமிழில் கடந்த 2013-ல் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 'நேரம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானாவார்தான் அல்போன்ஸ் புத்ரன்.

அதன்பிறகு இவரது இயக்கத்தில் மலையாளத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிரமேம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். மாஸ் ஹிட் கொடுத்த இப்படத்தின்மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமானார்.

இந்த நிலையில், அண்மையில் கேரளாவில் உள்ள கோட்டயத்தில் இருக்கும் உணவகம் ஒன்றில் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலே அவரது உடல்நிலை மோசமாய் உயிரிழந்தார். மேலும் இந்த உணவகத்தில் உணவு உண்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், உணவகத்தில் கெட்டுப்போன உணவு விநியோகிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் அந்த உணவகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரிய பூதாகரமான நிலையில், அப்பகுதி மக்கள் கடையை அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பர் ஷராஃப் உதீன், எனக்கு ஷவர்மா வாங்கிக்கொடுத்தார். நான் அதை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்டேன்.

அடுத்த நாள் நான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கிட்டத்தட்ட ரூ.70,000 செலவு செய்து என் பெற்றோர் என்னைக் காப்பாற்றினார்கள். இதற்காக காரணமே இல்லாமல் என் நண்பர் மீது நான் கோபப்பட்டேன்.

ஆனால், கெட்டுப்போன அசுத்தமான உணவுதான் என் நிலைமைக்குக் காரணம். இங்கே உண்மையான குற்றவாளி யார்? கண்களைத் திறந்து உண்மையைப் பாருங்கள். வாழ்க்கை மிகவும் விலை உயர்ந்தது." எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: தொடரும் சோகம்.. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த ஹோட்டல் உரிமையாளர் மரணம்!