Cinema

‘சமந்தா முதல் தீபிகா வரை..‘ ட்ரோல் செய்யப்படும் நடிகைகள்.. கண்டனம் தெரிவித்த சூர்யா பட நடிகை !

தமிழில் 2004-ம் ஆண்டு சிம்பு, விஜயகுமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. முன்னதாக கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் குத்துவை தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மொழிகளில் கவனம் செலுத்தி திவ்யா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பியாகவும் பதவி வகித்தார். இருப்பினும் தனது நடிப்பை விடாத திவ்யா, தற்போது கன்னட திரைபடங்களில் பிசியாக இருக்கிறார்.

இருந்த போதிலும், தனது கட்சி பணிகளையும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது சமூக கருத்தையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது பெண்களை தொடர்ந்து ட்ரோல் செய்வதாக கூறி நடிகை திவ்யா ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய் பல்லவி அரசியல் ரீதியாக தனது கருத்தை தெரிவித்ததற்காகவும், ராஷ்மிகா மந்தனா பிரிந்ததற்காகவும், தீபிகா படுகோன் அவரது ஆடைக்காகவும், அவர்களைப் போல பல பெண்கள் ட்ரோல் செய்யப்படுகின்றனர். தேர்வு சுதந்திரம் நமது அடிப்படை உரிமை. பெண்கள் மா துர்காவின் உருவகம் கொண்டவர்கள். பெண் வெறுப்பு என்பது நாம் போராட வேண்டிய ஒரு தீமை" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதள பக்கத்தில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பிரிவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்த நிலையில், சமந்தா மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் அதிகமாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.

மேலும் நடிகை சாய் பல்லவி, 'மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக ஒருவரை கொலை செய்வது' குறித்தும், குறிப்பிட்ட சமூகத்தினரை பயனக்ராவாதிகள் போல் காட்டுவது குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கும் ஒரு கும்பல் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடிகை ராஷ்மிகா, மீதும் கன்னட திரையுலகில் இருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. காந்தாரா படம் குறித்து அவர் பேசியிருந்தது குறித்து கடுமையாக விமர்சித்து பலராலும் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை தீபிகா 'பதான்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு பிகினி உடையில் நடனமாடினார்.

மேலும் அவர் ஆரஞ்சு நிற உடையை அணிந்திருப்பதால், அதனை காவி நிற உடையை அணிந்து தீபிகா நடனமாடியுள்ளார் என்று இந்துத்துவ கும்பல் கண்டனம் தெரிவித்து பதான் படத்தை தடை செய்யும்படியும் வலியுறுத்தி வருகின்றனர். பதான் பட பாடல் சர்ச்சைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சிலர் இந்துத்துவ கும்பலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகை திவ்யாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read: “இது மட்டும் சரியா?”: பதான் பாடல் சர்ச்சை -எதிர்க்கும் இந்துத்துவ கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் தலைவர்கள்