Cinema

“O2 முதல் கார்கி வரை” - சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறப்போகும் அந்த 12 தமிழ் படங்கள் என்னென்ன?

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று சென்னையில் தொடங்குகிறது. கடந்த 2003 முதல் நடைபெற்று வரும் இந்த விழா, 20 ஆண்டுகளாக தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இதனை காண நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் பலரும் வருகை தருவர்.

தமிழ்நாடு அரசுடன் இந்தோ - சினி அப்ரிசியேஷன், பி.வி.ஆர் சினிமாஸ் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகிறது. சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று துவங்கும் இந்த விழாவை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் துவக்கி வைக்கிறார்.

பி.வி.ஆர் காம்ப்ளக்ஸ் தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் இன்று தொடங்கி (15.12.2022) வரும் 22-ம் தேதி வரை திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உட்பட 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவில் மொத்தம் 30 படங்கள் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதிலிருந்து தற்போது இரவின் நிழல், மாமனிதன், கார்கி, கசட தபற, ஆதார், இறுதிப் பக்கம், நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் என 12 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 'இந்தியன் பனோரமா' பிரிவின் கீழ் தமிழ், மலையாளம், பெங்காலி, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை சார்ந்த 15 இந்திய படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கடைசி விவசாயி, மாலைநேர மல்லிப்பூ, போத்தனூர் தபால் நிலையம் ஆகிய முன்று தமிழ் படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில் திரையிடப்படும் படத்தில் இருந்து சிறந்த முதல் படம், சிறந்த இரண்டாவது படம், நடுவர்கள் சிறப்பு விருது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒலிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என 8 விருதுகளுடன் திரையுலகில் சிறந்து விளங்கிவரும் ஒருவருக்கு 'அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது' உட்பட மொத்தம் 9 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அதோடு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி மாணவர்கள் படைப்பில் உருவான சிறந்த 9 குறும்படங்கள் திரையிடப்படவுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன், பீஸ்ட், இரவில் நிழல்கள் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கேற்று பேச உள்ளனர்.

சென்னை சத்யம் சினிமா வளாகத்தில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம், ஒவ்வொரு நாளும் 20 படங்கள் திரையிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நுழைவு கட்டணம் ரூ.1000 ; மாணவர்கள், சீனியர் சிட்டிஸன்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மட்டும் ரூ. 500 . மேலும் விவரங்களுக்கு https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Also Read: “‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி நடத்துவதற்கான முயற்சி எடுத்துள்ளோம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!