Cinema

இனி இந்த 2 படங்களின் அடுத்த பாகங்கள் வராது.. அதிரடியாக அறிவித்த DC.. அதிர்ந்து போன திரை ரசிகர்கள் !

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கும் நிறுவனங்கள் தான் மார்வெல் மற்றும் டிசி. இவர்கள் தான் உலகில் இருக்கும் ஒட்டுமொத்த சூப்பர் மேன் முதல் ஸ்பைடர் மேன் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கியது.

காமிக்ஸ் கதாபாத்திரமாக புத்தகத்தில் மட்டுமே இருந்த இவர்களுக்கு உயிர் கொடுத்தது என்றால் அது இந்த இரண்டு பிரபல நிறுவனங்கள் தான். அதிலும் சூப்பர் மேன், பேட் மேன், அக்வா மேன், ஒண்டர் உமன் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு டிசி குழுமமே உரிமை வாங்கியுள்ளது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மார்வெல் மட்டுமே முன்னிலையில் இருக்கும் நிலையில், அதனுடன் டிசி சரி சமமாக போட்டியிட முடியவில்லை.

மார்வெல் படம் வசூல் மலை போல் இருந்தால், டிசி படத்தின் வசூல் குன்று போல் காணப்படுவதாக திரை ரசிகர்கள் விமர்சித்தும் வந்தனர். இதற்கு காரணம் டிசி நிறுவனத்தின் தலைமை சரியில்லை என்றும் பேச்சு அடிபட்டது. இருப்பினும் சில படங்கள் நல்ல வசூலையே ஈட்டியது.

அதன்படி இதிலிருக்கும் முக்கிய பெண் கதாபாத்திரமான ஒண்டர் உமன் (Wonder Woman) கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் தொடக்க காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கால் கடாட் நடித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான, சூப்பர் மேன் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட Man of Steel திரைப்படம் உலக அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அறிமுகமானது தான் Wonder Woman பாத்திரம். இதைத்தொடர்ந்து Wonder Woman படம் 2017-ம் ஆண்டு வெளியானது. 120 – 150 மில்லியன் பட்ஜெட்டில் உருவான இப்படம், 822.8 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 'Wonder Woman1984' கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. அப்போது இந்த படம் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்து படுதோல்வி அடைந்தது. மேலும் பட்ஜெட்டை கூட இந்த படம் வசூல் செய்யவில்லை. இருப்பினும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, டேவிட் ஜாஸ்லா என்பவர் அண்மையில் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ள டிசி நிறுவனத்தை, மார்வெலை போன்று பிரம்மாண்டமாக மாற்ற அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

இதற்காக, மார்வெலின் கார்டியன்ஸ் ஆஃப்தி கேலக்ஸி திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சாஃப்ரான் ஆகியோரை, டிசி நிறுவனத்தின் புதிய தலைவர்களாக நியமித்துள்ளார். இந்த இருவரும் சேர்ந்து, டிசி சார்பில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வெளியாக உள்ள படங்களுக்கான பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டிசி-யின் முக்கிய பெண் கதாபாத்திரமான Wonder Woman அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதனை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் Man of Steel 2 திரைப்படமும் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதோடு இது போல் மக்களிடம் பிரசித்தி பெற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு புதிய காதாபாத்திரம் உருவாக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரு புறம் ரசிகர்கள் சோகமாகவும், மறுபுறம் அரவமாகவும் உள்ளனர்.

Also Read: சிறந்த நடிகர் to சிறந்த மனிதர்.. அமெரிக்கா பத்திரிகை இதழ் பட்டத்தை தட்டி செல்லும் உக்ரைன் அதிபர் !