Cinema

"இது ஒன்னு சினிமா இல்ல சார்.." - ஆறுதல் கூற சென்ற பவன்கல்யாணின் செயலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது சினிமா பாணியில் கார் மீது அமர்ந்து சென்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்ளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக அம்மாநில அரசு குண்டூரில் இருக்கும் 'இப்படம்' என்ற கிராமத்தை சேர்ந்த குடியிருப்பு வாசிகளின் வீடுகளை இடித்தது. முன்னேற்பாடுகள் இன்றி ஆந்திரா அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது.

மேலும் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து சில காட்சிகள் ஆறுதலும் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் நேற்று (சனிக்கிழமை) 'இப்படம்' பகுதி மக்களை நேரில் சந்திக்க சென்றார்.

வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பவன்கல்யாண், சினிமா பாணியில் காரின் மேற்கூறையில் மாஸாக அமர்ந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பவன் கல்யாண், காரின் மேற்கூறையில்அமர்ந்திருக்க, அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஓடும் காரின் ஓரத்தில் தொங்கி வருகின்றனர். மேலும் அவரது காருக்கு பின்னால் வரும் கார்களிலும் சிலர் உள்ளே அமர்ந்தவாரும் மற்ற சிலர் கார்களின் வலது மற்றும் இடதுபுறம் தொங்கியும் வருகின்றனர்.

மேலும் இவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது, பிரத்யேக ட்ரோன் மூலம் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவர் அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இவரது இந்த செயலின் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருவதால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பொதுமக்களும், சமூக ஆர்வலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற செல்லும் ஒரு அரசியல் தலைவரின் நடவடிக்கையா இது என்றும், இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இது தற்போது மீண்டும் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கொய்யாப்பழம் பறித்த பட்டியலின இளைஞர்.. அடித்து கொன்ற கும்பல்.. பாஜக ஆளும் மாநிலத்தில் தொடரும் தீண்டாமை..