Cinema
"என்னை இப்படி கூப்பிட்டால்.. " - மேடையில் செருப்பை காட்டி ஆவேசமாக பேசிய பவன் கல்யாண் !
தன்னை யாரேனும் 'பேக்கேஜ் ஸ்டார்' என்று அழைத்தால், அவரை என் செருப்பால் அடிப்பேன் என்று பொது மேடையில் நடிகர் பவன் கல்யாண் ஆவேசமாக கூறியுள்ளதால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது பிரபல தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், ஆந்திராவின் எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் விமர்சித்தது.
மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரம் அமைக்க வலியுறுத்தி, வட ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழுவினர், சில நாட்களுக்கு முன்பு, 'விசாக கர்ஜனை' என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
இதில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர், நடிகையும், அம்மாநில அமைச்சருமான ரோஜா உள்ளிட்டோரின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ரோஜாவின் உதவியாளர், மற்றும் சில காவல் அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து, பாஜகவின் 'பி டீம்'மாக நடிகர் பவன் கல்யாண் செய்லபடுவதாகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பா.ஜ.கவிடம் இருந்து பணம் வாங்கி தான் நடத்தி வருவதாகவும் YSR காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அமராவதி பகுதியை அடுத்துள்ள மங்களகிரியில் தனது கட்சி நிர்வாகிகளிடையே பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது ஆவேசமாக பேசிய அவர், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தார். அதோடு மட்டுமில்லாமல், "என்னை பற்றி இனி தவறாக பேசினால் 'செருப்பால் அடிப்பேன்'" என்று தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி காட்டி ஆளுங்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் "YSR காங்கிரஸ் கட்சி குண்டர்களே.. என்னுடைய பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்றும் பகிரங்கமாக மிரட்டினார்.
முன்னதாக பவன் கல்யாண் பாஜகவிடம் இருந்து பணம் வாங்கி கட்சி நடத்துவதால் தான் அவரை மக்கள் 'பேக்கேஜ் ஸ்டார்' என்று அழைப்பதாக YSR காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். இந்த நிலையில், தன்னை யாரேனும் 'பேக்கேஜ் ஸ்டார்' என்று அழைத்தால், அவரை என் செருப்பால் அடிப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.
பவன் கல்யாணின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது செருப்பை கையில் எடுத்து கொண்டு மற்றொரு அரசியல் கட்சியை குறிப்பிட்டு அக்கட்சியினரை செருப்பால் அடிப்பேன் என்று பேசியது அரசியல் நாகரீகம் அல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!