Cinema

“தமிழ்நாடு மதசார்பற்றதாக இருப்பதற்கு காரணம் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததுதான்” : வெற்றிமாறன் !

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிரச்னைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.

அதற்கு அவர், 'தனிமனிதனால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்' என்றார். மேலும், 'கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்' என்றும் என்னிடம் அவர் கூறினார்.

தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன். சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது.

இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் 'கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை' என்றார்கள். சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம்.

மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது போன்றவை தொடர்ந்து நடக்கிறது." என்று பேசினார்.

Also Read: "குழந்தைகளுக்கான படங்கள் : இயக்குநர்களுக்கு பக்குவம் இல்லை.." - இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி !