Cinema

"எண்ணி ஏழு நாள்.. 180 நாட்கள் ஆன கதை.." இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை.. - காரணம் என்ன ?

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, 'ரன்', 'ஜீ', 'சண்டக்கோழி', 'சண்டக்கோழி 2', 'பீமா', 'பையா' என பல படங்களை இயக்கியுள்ளார். சில படங்கள் வெற்றி கொடுத்த நிலையில், மற்ற சில தோல்வியை சந்தித்தது.

சுமார் 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு ராம் பொத்தனேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான திரைப்படம் தான் 'தி வாரியர்'. ஆனால் இந்த படமும் தோல்வியை தான் சந்தித்தது.

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், "எண்ணி ஏழு நாள்" என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி பெற்றிருந்தது.

இதையடுத்து இந்த கடன்தொகையை திருப்பி செலுத்தவில்லை என்பதால், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிவிபி நிறுவனத்துக்கு இயக்குநர் லிங்குசாமி கடன்தொகையை செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து லிங்குசாமியும் கடன் தொகையான 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பினார். ஆனால் இயக்குநரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தினால், அவர் அனுப்பிய காசோலை திரும்பி வந்தது.

பின்னர், பிவிபி நிறுவனம் இயக்குநர் மீதும், அவரது சகோதர் மீதும் சைதாபேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் லிங்குசாமிக்கு, அவரது சகோதரரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் லிங்குசாமி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகம் சற்று பரபரப்பான சூழ்நிலையில் காணப்படுகிறது.

Also Read: நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம்.. உறவினர்கள் செயலால் தாய், குழந்தைக்கு நேர்ந்த அவலம் !