Cinema

ஒரு காதல்.. பழிவாங்கும் இரு குடும்பம் - சாட்சியாக ஆறு: Paka விமர்சனம்!

மலையாள சினிமா பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்திலுமே கூட மலையாள சினிமாவுக்கென ஒரு தனித்த இடம் இருந்தது. அந்த இடம் இன்னுமே தொடர்வதுதான் மலையாள சினிமாவின் சிறப்பாக இருக்கிறது.

கடந்த காலத்தில் தனியாவர்த்தனம், மதிலுகள், விதேயன், வனப்பிரஸ்தம் என மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டியும் மோகன்லாலும் இலக்கியங்களை தங்களின் நடிப்பாற்றலை துய்ப்பதற்கான களங்களாக பயன்படுத்தினர். விளைவாக அவர்களது நடிப்பும் பல பரிமாணங்களை எட்டியது. இலக்கியமும் தன் சிறகை விரித்தது. சினிமாவும் செழுமை அடைந்தது. பிறகு இளைய நடிகர்கள் வரத் தொடங்கினர். லிபரல்தன்மை மற்றும் மசாலா திரைப்படங்கள் பல வெளிவரத் தொடங்கின. போட்டியை சமாளிக்க சூப்பர்ஸ்டார்களும் கமர்ஷியலாக இறங்கினர். சில வருடங்களுக்கு மலையாள சினிமாவின் தரம் தோயத் தொடங்கியது.

சமீபமாக புது இயக்குநர்கள் வந்து மலையாள சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சி வருகின்றனர். அவற்றில் பல இன்றைய தாராளவாத காலப் பின்னணியில் சமூகப்பார்வையை இலக்கியப்பூர்வமாக முன் வைக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அத்தகைய ஒரு படம்தான் ‘பக’ (Paka).

நிதின் லுகோஸ் இயக்கியிருக்கும் இப்படம் மிகவும் எளிய கதைதான். ஜானி என்பவன் அன்னா என்னும் பெண்ணை காதலிக்கிறான். ஆனால் இரு குடும்பமும் ஜென்ம பகையில் இருக்கும் குடும்பங்கள். எல்லா தலைமுறையிலும் ஒருவருக்கு ஒருவர் எனப் பழிவாங்க கொலை செய்து சிறை சென்று வரும் வழக்கம் கொண்ட குடும்பங்கள் அவை. தங்களுடன் இரு குடும்பங்களின் பகையும் முடியட்டும் என நினைக்கிறது ஜோடி. அது நடக்கிறதா என்பதுதான் மிச்சக் கதை.

வழக்கமான கதை போலத் தோன்றுகிற கதைதான். ஆனால் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் இன்றையச் சூழலிலும் நாம் வளர்த்து நீட்டித்துக் கொண்டிருக்கும் பகை மற்றும் பழிவாங்கல் உணர்வுகளின் அபத்தத்தைச் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

கதை நடக்கும் ஊரில் ஒரு ஆறு இருக்கிறது. இரு குடும்பங்களின் பகைக்கும் அந்த ஆறுதான் சாட்சியாக இருக்கிறது. அந்த ஆற்றை காலம் என புரிந்து கொள்ளலாம். சாதி, மதம், ஆணாதிக்கம், அதிகாரம், உயர்வு, பணம் என பல விஷயங்கள் எப்படி பகையைக் காலந்தோறும் வளர்த்து வருகின்றன என்பதை அமைதியாக கண்டு அனுபவித்து சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது அந்த ஆறு.

வயது முதிர்ந்து படுத்த படுக்கையாக இருக்கும் பாட்டி கூட கடந்த காலத்தைக் கடத்தி பகையூட்டும் கண்ணியாகவே செயல்படுகிறார் என்கிற காட்சியில் சமூகம் கட்டப்பட்டிருக்கும் விழுமியங்களின் பலவீனம் பல்லிளிக்கிறது.

இப்படத்தை பிரபல இந்திப் பட இயக்குநர் அனுராக் கஷ்யம் தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டின் டொரொண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Also Read: சுணக்கம் கொடுக்கதாக web series - Breaking Bad சீரிஸ்ஸின் யுனிவெர்ஸ்ஸை கொண்ட Better Call Saul : விமர்சனம்!