Cinema

‘காளி’ கையில் சிகரெட்.. LGBT கொடி கொடுத்தது ஏன் ? - சர்ச்சை போஸ்டருக்கு இயக்குநர் சொல்லும் விளக்கம் என்ன?

தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் லீனா மணிமேகலை. இவரது இயக்கத்தில் வெளியான ஆவண படங்களான பறை, தேவதைகள், பலிபீடம் பல படங்கள் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் சில படங்களுக்கு விருதுகளும் கிடைத்தன.

அண்மையில் வெளியான சாதி அடக்குமுறையை பற்றி பேசு 'மாடத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் பெரியத்திரையில் அறிமுகமானார். இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்றது.

இந்த நிலையில், லீனா மணிமேகலை தயாரித்து, நடித்து, இயக்கிய 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த போஸ்டரில் ஒரு பெண் காளி வேடம் அணிந்து, சிகரெட் புகைப்பது போன்றும், கையில் LGBT சமூகத்தின் கொடியை பிடித்திருப்பது போன்றும் இடப்பெற்றிருந்தது.

இந்த புகைப்படம் வெளியாகி பல தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் வலுவாக எழுந்துள்ளது. கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கண்டன பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த லீனா பேசுகையில், "கனடா நாட்டின் டோரோண்டோவில் 'யோர்க் பல்கலைக்கழகம்' உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஒரு சர்வதேச திரைப்பட இயக்குநரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு உதவித்தொகை கொடுத்து பயிற்சியும் அளிக்கிறது. அதில் 2020 ஆம் ஆண்டு என்னை தேர்ந்தெடுத்தது. இருப்பினும் Pandemic, #metoo defamation case என்று எனது பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை எல்லாம் இப்போது தான் சரி செய்து, கனடா வந்துள்ளேன். இப்போது சினிமா சார்ந்து படிக்கும் மாணவர்களில் சிலரை தேர்தெடுத்து, அவர்களுக்கு பன்முக கலாசாரத்தை பற்றிய படங்களை எடுக்கும் முகாமில் கலந்துகொள்ள டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் என்னை அழைத்திருந்தது. அதில் கலந்துகொள்ள நான் எடுத்த படம் தான் 'காளி'. இந்த படத்தை நானே இயக்கி, தயாரித்து, நடிக்கவும் செய்துள்ளேன்.

இந்த படத்தின் கதை கரு என்னவென்றால், ஒரு மாலை நேரத்தில், டோரோண்டோ நகரத்தில் 'காளி' தோன்றி வீதிகளில் உலா வரும்போது என்னெல்லாம் நடக்குமோ அதன் சம்பவங்கள் தான் இந்த படம். இந்த படம் வெளியானபின் இதை பார்த்தால், #arrestleenamanimekalai என்பதற்கு பதிலாக, அனைவரும் #loveyouleenamanimekalai என்று தான் பதிவிடுவார்கள்." என்றார்.

'காளி' பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குநர் லீனா மணிமேகலை மீது, டெல்லி சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மோடிஜி, அமித்ஷா 2 பேரும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள்”: பாஜக கூட்டத்தில் உண்மையை போட்டுடைத்த ராதாரவி!