Cinema

அப்போதும் - இப்போதும்.. பாசிசத்தின் கோர முகம் ஒன்றுதான்: உண்மையை வெட்ட வெளிச்சமாகும் 1984 படம்!

வாழ்க்கையின் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

பொய் புரட்டுகளை எத்தனை ருசியாக சமைத்துக் கொடுத்தாலும் கசப்பான உண்மையே இறுதியில் ஜெயிக்கும் என்பதுதான்.

1949ம் ஆண்டில் ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் 1984 என்கிற ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல் பின்னாளில் படமாகவும் எடுக்கப்பட்டது. படத்தின் கதை இதுதான்:

ஓசானியா என்கிற ஒரு சர்வாதிகார நாட்டில் நாயகன் வாழ்கிறான். அங்கு சிந்தனைக் காவல்துறை என ஒரு பிரிவு இருக்கிறது. அதன் தொடர் கண்காணிப்பில்தான் மக்கள் இருப்பார்கள். நாயகன் அரசுப் பணியில்தான் இருக்கிறான். அவன் வேலை பார்ப்பது உண்மை அமைச்சகத்தில். அவனது வேலை, கட்சி உத்தரவிட்டபடி, வரலாற்றை மாற்றி எழுதுவதுதான். அந்த நாட்டின் தலைவரை ‘பிக் பிரதர்’ என அழைக்கின்றனர். அவர் மக்கள் வசிக்கும் பொதுஇடங்களில் வர மாட்டார். எப்போதுமே பிரச்சார போஸ்டர்களிலும் பதாகைகளும் தொலைக்காட்சிகளிலும் மட்டும்தான் தோன்றுவார்.

ஓசனியா இருக்கும் போர்ச்சூழல் பற்றிய பல முரண் மற்றும் பொய்க் கதைகள் பற்றிய பிரசாரப் படங்கள் தொடர்ந்து மக்களுக்குக் காண்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மூளைச்சலவை தொடர்ந்து நடைபெறும். இத்தகையச் சூழலில் நாயகன் தன்னுடைய குழந்தைக்கால நினைவுகள், இச்சைகள் முதலியவற்றை ஒரு டைரியில் எழுதுகிறான். அந்த டைரி சிந்தனைக் குற்றமாகும். எனவே அது கண்காணிப்பில் வந்துவிடாதபடிக்கு ஒளித்து வைத்து பயன்படுத்துகிறான்.

அவனின் வாழ்க்கையில் நாயகி எதிர்ப்படுகிறாள். அவளும் கட்சிப் பணியில்தான் இருக்கிறாள். இருவருக்கும் இடையே உறவு தோன்றுகிறது. அலுவலகத்துக்குக்கு வெளியே தூரமாக ஓர் ஊரில் இருவரும் கலவி கொள்கின்றனர். பிறகு பெரிய கட்டுப்பாடுகள் இல்லாத பகுதியில் நாயகன் ஓரறையை வாடகைக்கு எடுத்து நாயகியுடனான உறவைத் தொடர்கிறான். சில மாதங்களுக்கு இருவரின் உறவும் தொடர்கிறது.

ஒருநாளில் திடுமென சிந்தனைக் காவல்துறை அவர்களின் அறையில் ரெய்டு நடக்கிறது. சுவரில் இருந்த ஒரு படத்துக்குப் பின் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவியில் அவர்களின் உறவு பதிந்ததும் அறைக்குக் கீழ் வசிக்கும் அடகுக்கடைக்காரர் ஒரு ரகசிய சிந்தனைக் காவலர் என்பதும் பின்புதான் தெரிய வருகிறது. காதல் அமைச்சகத்துக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுப் பிரிக்கப்படுகின்றனர்.

முரணான சிந்தனை தோன்றியதால் நாயகன் சித்ரவதை அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறான். அங்கு நாயகனின் மனம் கொண்டிருக்கும் அச்சங்களுக்கேற்ப சித்ரவதைகள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. எலிகள் நிரம்பிய கூண்டுக்குள் இருத்தப்படுகிறான். தொடர் அகநிலை அடக்குமுறையில் நொறுங்குகிறான் நாயகன். அவனுடைய கொஞ்ச நஞ்ச எதிர்ப்புணர்வும், சிந்தனையும், உறவும் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறான்.

ஒரு விடுதியில் கடைசியாக ஒருமுறை நாயகியை சந்திக்கிறான். அவளும் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறாள். அடுத்தவரைக் காட்டிக் கொடுத்த குற்றவுணர்வு அவர்களின் காதலை கொன்றிருக்கிறது. அசுவாரஸ்யமாகப் பேசுகிறார்கள். பிறகு நாயகி சென்றுவிடுகிறாள். அங்கிருக்கும் பெரிய திரையில் அரசுக்கு எதிராக செய்த குற்றத்தை அவன் ஒப்புக்கொள்ளும் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நாயகன் சிந்தனையற்றவனாகவும் சுதந்திரம் மறுக்கப்பட்டவனாகவும் வெறும் ஒரு மனிதக் கூடாக மட்டும் சுருங்கி அமர்ந்திருக்கிறான். நாட்டுத் தலைவரின் படத்தை வெறுமனே வெறித்துப் பார்க்கிறான். அதிலிருந்து முகத்தை திருப்பி கண்கள் கலங்குகிறான். படம் முடிகிறது.

ஜார்ஜ் ஆர்வெல் இந்த நாவலை சோவியத் யூனியன் மீதான விமர்சனமாக எழுதினார். ஆனால் அங்கு அத்தகையச் சூழலெல்லாம் உண்மையில் இருக்கவில்லை என்பதை இன்றைய ரஷ்யாவில் இருக்கும் சோவியத் யூனியனின் ஆதரவாளர்கள் தரும் செய்திகள் உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனினும் சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிசம் மீதான பொய்ப் பிரசாரத்தைப் பரப்ப 1984 நாவல் படமாக்கப்பட்டது.

ஆனால் சுவாரஸ்யம் என்னவெனில், தொடர் கண்காணிப்பு, சிந்தனைக் குற்றம், காதல் மற்றும் மனிதம் எதிர்க்கும் அரசு முதலியவை யாவும் இன்று நேர்ந்து கொண்டிருப்பது கம்யூனிச அல்லது சோசலிச நாடுகளில் அல்ல என்பதுதான். சோவியத் யூனியனை எதிர்த்து பிரசாரம் செய்த அமெரிக்க முதலிய மேற்கத்திய நாடுகளின் ஆதரவில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில்தான் லவ் ஜிகாத் என்கிற பெயரில் காதல் எதிர்க்கப்படுகிறது. அக்னிபாத் என்கிற பெயரில் மக்களை ராணுவமயமாக்கும் உத்தி நடந்து கொண்டிருக்கிறது. மனிதனை வெறும் வெறுப்பின் இயந்திரமாக மாற்றும் பிரசார வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் தலைவர் தொலைக்காட்சிகளில் மட்டும் தோன்றி வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு ஆதரவாக சிந்திப்பவர்களின் வீட்டை இடிப்பதும் கொல்வதும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதையும் அரசு செய்து கொண்டிருக்கிறது.

மக்களுக்கு எதிரான பாசிச அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

ஜார்ஜ் ஆர்வெல்லின் சமாதியில் நின்று, உண்மை சிரிக்கத் தொடங்கி பல காலமாகிவிட்டது.

Also Read: கைதி to விக்ரம் : Shared Universe பற்றி தெரியுமா? - லோகேஜின் ‘LCU’-வால் தமிழ் சினிமா இழக்கப் போவது என்ன ?